‘சகோதரிக்கு எதிராக மனைவியை தேர்தலில் போட்டியிட வைத்தது தவறு’ - கலங்கும் அஜித் பவார்!


மும்பை: சமீபத்தில் நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் தனது மனைவி சுனேத்ரா பவாரை, தனது சகோதரி சுப்ரியா சுலேவுக்கு எதிராக நிறுத்தியது தவறு என்று மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் கூறியுள்ளார்.

தற்போது மாநிலம் தழுவிய 'ஜன் சம்மன் யாத்திரை'யில் ஈடுபட்டுள்ள அஜித் பவார், தனியார் செய்தி சேனலிடம் பேசும்போது அரசியலை வீட்டுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று கூறினார்.

இது தொடர்பாக பேசிய அவர், “எனது சகோதரிகள் அனைவரையும் நான் நேசிக்கிறேன். அரசியலை வீட்டுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது. என் சகோதரிக்கு எதிராக சுனேத்ராவை களமிறக்கியதில் நான் தவறு செய்தேன். இது நடந்திருக்கக்கூடாது. ஆனால் எங்கள் கட்சியின் நாடாளுமன்ற குழு இந்த முடிவை எடுத்தது. இப்போது நான் அது தவறு என்று உணர்கிறேன்” என்று அஜித் பவார் கூறினார்.

இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், சரத் பவாரின் மகளான சுப்ரியா சுலேவை எதிர்த்து பாராமதி தொகுதியில் போட்டியிட்ட அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் தோல்வியடைந்தார். அதன்பின்னர் சுனேத்ரா பவார் மாநிலங்களவை எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், சரத் பவாருக்கு எதிராக கிளர்ச்சி செய்த அஜித் பவார் மற்றும் பல எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா-பாஜக அரசில் இணைந்தனர். இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது.

x