பீகார் ரயில் விபத்து... உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு!


பீகாரில் ரயில் தடம்புரண்ட விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

டெல்லியின் ஆனந்த்பீகார் ரயில் நிலையத்திலிருந்து அசாம் மாநிலம் கவுகாத்தி நோக்கி கிளம்பிய வடகிழக்கு எக்ஸ்பிரஸ் ரயில் பீகாரின் பக்ஸர் அருகே வந்த போது விபத்திற்குள்ளானது. ரகுநாத்ப்பூர் ரயில் நிலையத்திற்கு மிக அருகில் நடந்த இந்த விபத்தில் ரயில் தடம் புரண்டு 6 பெட்டிகள் கவிழ்ந்தன.

இந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தினர்.

ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் பயணிகளும், பொதுமக்களும் தங்கள் செல்போன் டார்ச் மூலம் மீட்பு பணிகளுக்கு உதவினர்.

இந்நிலையில் விபத்தில் இறந்த 4 பேரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிதியுதவி வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. விபத்து காரணமாக 2 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதுடன் 21 ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி… தடம் புரண்ட விரைவு ரயில்... 6 பேர் பலி... பலர் காயம்!

x