கைலாசா தேசத்தின் ’பிரதமராக’ அறிவிக்கப்பட்ட போதும் அதிகாரம் ஏதுமின்றி தவித்து வருகிறார் ’மா நித்யானந்தா மாயி’ ரஞ்சிதா.
ஆள்கடத்தல், பாலியல் பலாத்காரம் என இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான சுவாமி நித்தியானந்தா, இந்தியாவுக்கு வெளியே ’இறையாண்மை’ தேசம் ஒன்றை உருவாக்கியதோடு, அதற்கு தன்னை அதிபராகவும் அறிவித்துக் கொண்டார். பசிபிக் பிராந்தியத்தின் குட்டித் தீவு ஒன்றினை விலைக்கு வாங்கி, கைலாசா தேசத்தை நித்தி அண்ட் கோ நிர்மாணித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த கைலாசா சார்பில் நித்தியின் சிஷ்யைகள் அவ்வபோது அமெரிக்கா முதல் ஐநா சபை தரிசனம் தந்து பரபரப்பை கிளப்புவார்கள். இவற்றுக்கு மத்தியில் அண்மை பரபரப்பாக, கைலாசா பிரதமர் ரஞ்சிதாவை மையமாக்கி புதிய விவகாரம் ஒன்று வளைய வருகிறது.
நித்தியானந்தா - ரஞ்சிதா நெருக்கம் உலகறிந்தது. நித்தியின் தனிப்பட்ட தாதியாகவும் சேவையாற்றியதில், நித்தி சாம்ராஜ்ஜியத்தில் ரஞ்சிதாவுக்கு என தனி இடம் சாஸ்வதமாய் நீடித்து வருகிறது. அந்த செல்வாக்கு காரணமாகவே, நித்தி தன்னை அதிபராக அறிவித்துக்கொண்ட கைலாசா தேசத்துக்கு, ரஞ்சிதாவை பிரதமராக அறிவித்து கௌரவித்தார்.
இதனால் ரஞ்சிதாவும் அகமகிழ்ந்தார். இத்தனை ஆண்டு சேவைக்கு கிடைத்த அங்கீகாரமாக பெருமை கொண்டார். ஒரு பிரதமராக, கைலாசா நிர்வாகத்தில் பல திட்டங்களை செயல்படுத்தவும் ஆவல் கொண்டார். அப்போதுதான் தனக்கு தரப்பட்டது டம்மி பதவி என்பதையும், நிதர்சனத்தில் தனக்கென பிரத்யேக அதிகாரம் ஏதும் கிடையாது என்பதையும் அறிந்து நொந்தார்.
பிடதி முதல் கைலாசா வரை நித்தியின் ஆளுகைக்குட்டபட்ட அனைத்திலும் ரஞ்சிதா செல்வாக்கு செலுத்துவதை, நித்தி சிஷ்யகோடிகளில் குறிப்பிட்ட தரப்பினரால் ரசிக்க இயலவில்லை. உச்சமாக, கைலாசாவின் பிரதமராக ரஞ்சிதா அறிவிக்கப்பட்டதை அவர்கள் அடியோடு வெறுத்தார்கள்.
இதன் வெடிப்பாகவே, பிரதமராக இருந்தபோதும் ரஞ்சிதாவுக்கு அதிகாரங்கள் ஏதுமின்றி அவரை டம்மியாகவே நித்தி சிஷ்யர்கள் புலம்பவிட்டுள்ளனர். அதிலும், அதிபர் நித்திக்கு இணையாக பிரதமர் ரஞ்சிதாவும் ஆன்மிக உரைகளை நிகழ்த்துவதிலும் அவற்றை ஆன்லைனில் வெளியிடுவதிலும் ஆர்வம் கொண்டிருந்த போதும் அவை நாசூக்காய் முடக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, ’மா நித்யானந்தா மாயி’ பெயரிலான ரஞ்சிதாவின் அதிகாரபூர்வ சமூக வலைதளபக்கங்களில்கூட அவரது வீடியோக்கள் புறக்கணிப்பட்டு வருகின்றன. ஒரு பிரதமராக ரஞ்சிதா அழுத்தம் கொடுத்தபோதும், ரீல்ஸ் கணக்காக ஓரிரு குட்டி வீடியோக்கள் வெளியானதே ஒழிய, நித்திக்கு வாய்த்தது போன்ற நீண்ட வீடியோக்கள் ரஞ்சிதாவுக்கு அனுமதிக்கப்படவில்லை.
இதனால் ஆவேசமடைந்த ரஞ்சிதா நியாயம் கேட்டு, நித்தியை நெருக்கி வருகிறார். ஆனால் கொரோனா காலத்தில் உடல் நலிவுற்று சமாதி நிலைக்கு சென்று மீண்டிருக்கும் நித்தியே, தனது பழைய அதிகாரங்கள் காணது போனதையும், தன்னை ஒரு பிராப்பர்டியாக வைத்து புதிய லாபி வருமானம் ஈட்டி வருவதையும் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்.
உள்ளுக்குள் குமைந்தபோதும், அந்த லாபியின் அரசியல், அதிகார செல்வாக்கு காரணமாக நித்தியும் பம்மி வருகிறார். இந்த சூழலில் ரஞ்சிதாவின் புலம்பல்களை தொடர்ந்து நித்தி புறக்கணிக்க, கைலாசாவில் அதிபர் - பிரதமர் உரசல் அதிகரித்து வருகிறது. ரஞ்சிதாவால் நித்திக்கு எழுந்திருக்கும் சத்திய சோதனை, கைலாசாவின் புதிய களேபரங்களுக்கும் வித்திட இருக்கின்றன.