உள்ளாடைகளில் மறைத்து ரூ.6.2 கோடி தங்கக்கட்டிகள் கடத்தல்: 4 பேர் கைது!


பிடிபட்ட தங்கக்கட்டிகள்

மும்பை விமான நிலையத்தில் 6.2 கோடி ரூபாய் தங்கத்தை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) பறிமுதல் செய்துள்ளது. இந்த கடத்தல் வழக்குகள் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பை விமான நிலையத்தில் நேற்று(ஜூன் 3) மற்றும் நேற்று((ஜூன் 4) ஆகிய தேதிகளில் இரண்டு வெவ்வேறு வழக்குகளில் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) கிட்டத்தட்ட ரூ. 6.2 கோடி மதிப்புள்ள 10 கிலோவுக்கும் அதிகமான தங்கக் கட்டிகளைக் கைப்பற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கடத்தல் தொடர்பாக நான்கு பயணிகள் கைது செய்யப்பட்டனர்.

முதல் வழக்கில், ஷார்ஜாவிலிருந்து மும்பைக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் இரண்டு பயணிகளை டிஆர்ஐ அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் ரூ.4.94 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு அடையாளத்துடன் 8 கிலோ தங்கத்தை இடுப்பில் மறைத்து உள்ளாடைகளில் வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு உதவியாக இருந்தவர் உள்பட அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.

இரண்டாவது வழக்கில் துபாயில் இருந்து மும்பை விமான நிலைய ம் வந்த பயணி ஒருவர், சந்தேகத்தின் பேரில் சோதனையிடப்பட்டார். அவரிடமிருந்து பெண்கள் பயன்படுத்தும் 56 பர்ஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் கம்பிகள் வடிவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. அவரிமிருந்து மீட்கப்பட்ட தங்கத்தின் மதிப்பு 1.23 கோடி ரூபாயாகும். இதையடுத்து அந்த பயணி கைது செய்யப்பட்டார்.

x