ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது 9 நாள்கள் பயணம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று சென்னை திரும்புகிறார்.
அடுத்த ஆண்டு ஜனவரியில் சென்னையில் உலகத் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் முதலீட்டாளர்களை பங்கேற்க அழைப்பு விடுக்கவும், தொழில் முதலீடுகளை ஈர்க்கவும் கடந்த 23-ம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் சென்றார். அங்கு 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.
தொடர்ந்து அங்கு இருந்து ஜப்பான் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், 818 கோடியில் டோக்கியோவில் உள்ள 6 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதேபோல் ஓம்ரான் நிறுவனத்துடன் 128 கோடியில் மருத்துவ உபகரண உற்பத்தி தொழிற்சாலைத் தொடங்கவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 10 மணிக்கு சென்னை திரும்புகிறார். அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க ஆயுத்தமாகி வருகின்றனர்.