பாகிஸ்தான் அரசியல் களத்தில் உச்சக்கட்ட சவால்களை எதிர்கொண்டிருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு, இங்கிலாந்து தேசத்திலிருந்து கல்யாண தூது வந்திருக்கிறது.
கிரிக்கெட் ஆட்டக்காரராக உலகளவில் ஏராளமான ரசிகைகளின் இதயங்களில் இடம்பிடித்தவர் இம்ரான்கான். தீராத விளையாட்டுப் பிள்ளையாக மைதானத்துக்கு வெளியேயும் திரிந்திருக்கிறார். அதன் பின்னர் பக்குவம் பெற்று, சமூக சேவை, அரசியல்வாதி அவதாரம் என அடையாளம் மாறிப்போனார்.
இதுவரை இம்ரான்கானின் வாழ்க்கையில் அதிகாரபூர்வமாக 3 பெண்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். பல்வேறு பின்னணியிலான அவர்களை மனைவியராக மணந்திருக்கிறார். இம்ரானின் தற்போதைய மனைவியான புஸரா பிவி ஒரு அதிதீவிர ஆன்மிக பற்றாளர். இந்த வரிசையில் 4வதாக நான் வரட்டுமா என்று விண்ணப்பம் தட்டி விட்டிருக்கிறார் இங்கிலாந்தை சேர்ந்த டிக்டாக் பிரபலம் ஒருவர்.
ஜியா கான் என்ற இந்த டிக்டாக் பிரபலம், இம்ரான் கான் குறித்து வீடியோக்களில் உருகி இருப்பதோடு, ’நான் ரெடி; இம்ரான் ரெடியா?’ என்று பகிரங்கமாக புரப்போஸ் செய்திருக்கிறார். இம்ரானுக்கு தற்போதைய வயது 70. ஆனால் ’அதெல்லாம் ஒரு விஷயமே கிடையாது. அரசியல் சவால்கள் காரணமாக சோர்ந்திருக்கும் இம்ரானின் வாழ்க்கையில் வசந்தம் சேர்க்க, சேட்டைக்கார மனைவி தேவை. அதனை ஈடு செய்ய நான் ரெடி’ என்றிருக்கிறார்.
பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் அதிரடியாக ஆட்சியை பறிகொடுத்ததோடு, தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தையும் முன்னெடுத்திருக்கிறார். இம்ரானை முடக்கும் நோக்கில் அவர் மீது சிறிதும் பெரிதுமாய் நூற்றுக்கும் மேலான வழக்குகளை பாகிஸ்தான் அரசு புனைந்திருக்கிறது.
அடுத்தடுத்து கைது களேபரங்களால் முடங்கவிருந்த இம்ரான் கானின் அரசியல் வாழ்க்கை, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் கருணையால் தப்பிப் பிழைத்திருக்கிறது. இதனிடையே இம்ரானின் கட்சிக்கு தடை விதிக்கும் முனைப்புகளை அரசு மேற்கொண்டிருக்க, நிர்வாகிகள் பலரும் கட்சியை விட்டு காணாமல் போய் வருகிறார்கள். ’யார் போனாலும் சரி; ஒற்றை நபராய் நான் தனித்திருப்பினும், என்னுடைய போராட்டம் தொடரும்’ என்று முழங்கி வருகிறார் இம்ரான். இது மட்டுமன்றி அண்மை படுகொலைத் தாக்குதலில் காலில் பாய்ந்த குண்டுகளோடு, உயிர் தப்பியிருக்கும் இம்ரான் கான் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கும் ஆளாகியிருக்கிறார்.
இத்தனை ரணகளத்தின் மத்தியிலே விநோத கிளுகிளுப்பாய், இங்கிலாந்து டிக்டாக் பிரபலமான ஜியா கான், இம்ரான்கானுக்கு ’நான்காவது மனைவியாக நான் வரட்டுமா’ என்று கேட்டிருக்கிறார். இது ஜியா கானுக்கு வேண்டுமானால் கூடுதல் விளம்பரம் சேர்த்திருக்கலாம். ஆனால் இம்ரான்கானுக்கு?