சென்னை கொரட்டூர் பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் மற்றும் லாரி மீது மாநகர அரசு பேருந்து மோதி விபத்திற்குள்ளானது. நல்வாய்ப்பாக பேருந்தில் இருந்த பயணிகள் உயிர் தப்பினர்.
சென்னை மாநகர பேருந்து தடம் எண் 47d தி நகரில் இருந்து கொரட்டூர் பேருந்து நிலையம் நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. கொரட்டூர் பிரதான சாலை அருகே வந்த போது திடீரென பேருந்து பிரேக் பிடிக்காததால் ஓட்டுநர் தடுமாறியுள்ளார். இதனால் பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடியது.
இதனால் சாலையில் சென்றவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இந்த நிலையில், பேருந்து சாலையில் நிறுத்தப்பட்டிருந்த தண்ணீர் லாரி மற்றும் கார் மீது மோதி நின்றது. இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து பேருந்தில் பயணித்தவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் பயணிகளை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் அப்பளம் போல் நொறுங்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கொரட்டூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் ஓடக் கூடிய மாநகர பேருந்துகளின் தரமில்லாத வகையில் உள்ளது. முறையாக பழுது பார்ப்பதில்லை போன்ற குற்றச்சாட்டுகளை தொழிற்சங்கள் முன்வைத்து வரும் நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.