கன்வர் யாத்திரை விவகாரம்: உ.பி. அரசின் உத்தரவு மீதான தடையை மீண்டும் நீட்டித்தது உச்ச நீதிமன்றம் 


புதுடெல்லி: கன்வர் யாத்திரை பாதையில் உள்ள உணவகங்களில் பெயர் பலகைகளில் அதன் உரிமையாளர்களின் பெயர்களை எழுத வேண்டும் என்ற உத்தரப் பிரதேச அரசின் உத்தரவு மீதான தடையை உச்ச நீதின்றம் திங்கள்கிழமை மீண்டும் நீடிட்டித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, நேரமின்மை காரணமாக வழக்கை விசாரிக்க முடியாததால், இடைக்காலத் தடையை நீட்டித்து உத்தரவிட்டனர். வரும் செவ்வாய்க்கிழமை இந்த திருவிழா நிறைவடைய இருப்பதால், ஒரு பிரிவினர் முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று கோரிய நிலையில், வழக்கின் அடுத்த விசாரணை எப்போது என்று நீதிமன்றம் குறிப்பிடவில்லை.

கன்வர் யாத்திரை பாதையில் உள்ள உணவகங்களின் பெயர் பலகைகளில் அதன் உரிமையாளர்களின் பெயர்கள் இடம்பெற வேண்டும் என்ற உத்தரப் பிரதேச அரசின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடையை நீட்டிப்பது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, உ.பி. அரசின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் ஜூலை 22-ம் தேதி இடைக்கால தடை விதித்திருந்தது. பின்னர் ஜூலை 26-ம் தேதி அந்த தடை உத்தரவை நீட்டித்திருந்தது.

அன்று இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், எஸ்.வி.என். பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு தடையை நீட்டித்து உத்தரவிட்டதுடன், கன்வர் யாத்திரை பாதை தொடர்பான மாநில அரசின் உத்தரவுகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நான்கு மனுக்கள் மீது வழங்கப்பட்ட நோட்டீஸ் மீது பதில் அளிக்குமாறு மத்தியப் பிரதேசம், உத்தராகண்ட், டெல்லி அரசுகள் பதில் அளிக்குமாறு உத்தரவிரவிட்டிருந்தனர்.

x