சிபிஐ இயக்குநராக பிரவீன் சூட் நியமனம்; கர்நாடக காங்கிரஸார் கலக்கம்!


பிரவீன் சூட்

சிபிஐ அடுத்த இயக்குநராக, பிரவீன் சூட் என்ற ஐபிஎஸ் அதிகாரி இன்று அறிவிக்கப்பட்டுள்ளார்.

சிபிஐ இயக்குநராக சுபோத்குமார் ஜெய்ஸ்வாலின் பணிக் காலம் மே 25 அன்றோடு முடிவடைகிறது. இதனையொட்டி சிபிஐ அமைப்புக்கான புதிய இயக்குநரை தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கியது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அதீர் ரஞ்சன் சௌத்ரி மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திர்சூட் ஆகியோர் அடங்கிய குழு, தனது பரிசீலனையின் முடிவில் பரிந்துரை செய்திருந்தது.

இதன் அடிப்படையில், கர்நாடக டிஜிபியாக இருக்கும் பிரவீன் சூட் என்பவரை சிபிஐ இயக்குநராக நியமித்து மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் சிபிஐ இயக்குநர் பதவியில் அடுத்த 2 ஆண்டுகளுக்கு பிரவீன் சூட் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பிரவீன் சூட் பணிக்காலம் இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது. 2024 மே மாதத்துடன் அவர் ஓய்வு பெற்றாக வேண்டும். சிபிஐ இயக்குநராக அப்பதவியில் இன்னும் 2 ஆண்டுகளுக்கு நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அவரது பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்படும் எனத் தெரிகிறது.

கர்நாடக டிஜிபியாக இருக்கும் பிரவீன் சூட் ஆளும் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக, காங்கிரஸார் மத்தியில் கடும் கண்டனங்களை சம்பாதித்துள்ளார். தற்போது கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்த சூழலில் பிரவீன் சூட், அங்கிருந்து டெல்லிக்கு பறந்து சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்க உள்ளார்.

இதன் மூலம் அவர் கர்நாடக காங்கிரஸாருக்கு சிம்ம சொப்பனமாக அமைவார் என்றும், ஆட்சியை பறிகொடுத்த பாஜக இதன் மூலம் கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி தரும் என்றெல்லாம் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது.

x