[X] Close
 

வாட்ஸ் அப் ஃபார்வார்ட் நல்லது!- தொழிலாளியை தேடிப்பிடித்து உதவிய தொழிலதிபர்


impressed-by-a-cobbler-s-marketing-skills-anand-mahindra-helps-the-shoe-doctor-with-a-new-kiosk

  • பாரதி ஆனந்த்
  • Posted: 02 Aug, 2018 13:37 pm
  • அ+ அ-

வாட்ஸ் அப் ஃபார்வார்ட் தகவல்களால் அண்மைக்காலமாக கும்பல் வன்முறை அதிகரித்து வருவதால் இந்தியாவில் வாட்ஸ் அப் தகவல் பறிமாற்றத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், எல்லா நேரமும் வாட்ஸ் அப் ஃபார்வார்ட் தகவல்கள் கேடு விளைவிப்பதில்லை. சில நேரங்களில் நன்மையும் செய்கிறது. அப்படித்தான் வாட்ஸ் அப் ஃபார்வார்ட் செய்தி ஒன்று, சாலையோரம் செருப்பு தைத்துக் கொண்டிருந்த தொழிலாளிக்கு தொழிலதிபரின் உதவிக்கரத்தை பெற்றுத்தந்துள்ளது.

வாட்ஸ் அப் தகவலால், மஹிந்திரா கார் நிறுவனத்தின் நிறுவனர் ஆனந்த் மஹிந்திரா ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த சாலையோரத்தில் செருப்பு செப்பணிடும் தொழிலாளி நர்சி ராமுக்கு கடை வைத்துக் கொடுத்து உதவியிருக்கிறார். இந்தக் கடையை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதை எங்கு வேண்டுமானாலும் நகர்த்திச் செல்லலாம். வேலை நேரம் முடிந்தவுடன் கடையை மூடி ஒரு மரப் பெட்டி போல் மூடி வைத்துவிடலாம்.

கடந்த ஏப்ரல் மாதம் ஆனந்த் மஹிந்திராவின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு ஃபார்வர்டு செய்தி வந்துள்ளது. அதில் ஒரு புகைப்பட்டம் மட்டுமே இருந்தது. அந்தப் புகைப்படத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவர் வேலை பார்த்துக் கொண்டிருக்க அவர் பின்னணியில் ஒரு போஸ்டர் இடம் பெற்றிருக்கும். அந்த போஸ்டர்தான் ஹைலைட். 

அதில் இந்தியில் எழுதப்பட்டிருந்த தகவலைப் படித்த ஆனந்த் மஹிந்திரா போஸ்டரை தனது ட்விட்டரில் பகிர்ந்து, "இந்த நபர் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்டில் மார்க்கெடிங் பயிற்றுவிக்க வேண்டியவர்" எனப் பதிவிட்டிருந்தார். மேலும், அந்த புகைப்படத்தில் இருக்கும் நபரைக் கண்டுபிடிக்க முடிந்தால் தான் அவருக்கு தொழில் ரீதியாக உதவ விரும்புவதாகவும் கூறியிருந்தார். இந்த ட்வீட் வைரலானது.

இந்நிலையில் கிட்டத்தட்ட 4 மாதங்கள் கழித்து தற்போது அந்த நபர் குறித்த தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அந்த நபருக்கு ஹரியாணாவில் ஒரு செருப்புக்கடை வைத்துக் கொடுத்திருக்கிறார் ஆனந்த் மஹிந்திரா.
சாலையோரத்தில் கடை விரித்திருந்தவருக்கு சொந்தமாக கடை கிடைக்குமளவுக்கு அவர் அந்த போஸ்டரில் என்ன எழுதியிருந்தார் தெரியுமா?!

"காயமடைந்த ஷூக்களுக்கு மருத்துவமனை
மருத்துவர்: டாக்டர் நரசிம்மன்
ஓபி பார்க்கும் நேரம் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை
உணவு இடைவேளை மதியம் 1 முதல் 2 மணி வரை.
மருத்துவமனை மீண்டும் 2 மணிக்கு திறக்கப்பட்டு மாலை 6 மணி வரை இயங்கும்
எல்லா வகையான ஷூக்களும் ஜெர்மன் தொழில்நுட்பம் கொண்டு சீரமைக்கப்படுகிறது"

என்று எழுதப்பட்டிருந்தது.

இப்போது சொல்லுங்கள் இவரது மார்க்கெடிங் திறன் பற்றி.

[X] Close