10 நாட்கள் ரெய்டில் சிக்கிய 72 போலி மருத்துவர்கள்: உயர்நீதிமன்ற உத்தரவால் போலீஸ் அதிரடி


போலி மருத்துவர்கள்

தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களில் நடைபெற்ற சோதனையில் 72 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அனைத்திந்தியா நிறுவனத்தில் ஆறு மாத கால மாற்று மருத்துவத்தை படித்த 61 பேர் எந்தவித சட்ட இடையூறுமின்றி நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க தங்களை அனுமதிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணையில், மனுதாரர்கள் 61 பேரும் அங்கீகரிக்கப்படாத மருத்துவக்கல்வி நிறுவனத்தில் மருத்துவம் படித்துள்ளதாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஆறு மாத காலம் மருத்துவம் படித்துவிட்டு மருத்துவராக சிகிச்சை அளிக்கும் இவர்களை நம்பமுடியாது எனவும் மருத்துவ கவுன்சிலில் அங்கீகரிக்கப்படாத மற்றும் பதிவு செய்யாத மாற்று மருத்துவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபிக்கு உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் எஸ்.பிக்களுக்கு இது குறித்து சுகாதாரத்துறை இணை இயக்குநர்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கும்படி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

இந்தநிலையில் கடந்த 10 நாட்களில் தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை இணை இயக்குநருடன் சேர்ந்து தமிழக போலீஸார் நடத்திய சிறப்பு சோதனையில், தேனி மாவட்டத்தில் 4 போலி மருத்துவர்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 15 போலி மருத்துவர்கள், திருவாரூர் மாவட்டத்தில் 10 போலி மருத்துவர்கள், புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டத்தில் தலா 4 போலி மருத்துவர்கள் மற்றும் தஞ்சாவூரில் 5 பேர், ஓசூரில் 3 பேர் என மொத்தமாக 72 போலி மருத்துவர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட போலி மருத்துவர்களிடம் இருந்து மருந்துகள், மருத்துவ சாதனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து பின்னர் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறை, இந்த சோதனையானது தொடர்ந்து நடைபெறும் என்றும் கைது நடவடிக்கை தொடரும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

x