தாமதமாக தந்தை எழுப்பியதால் ஆத்திரமடைந்த மகன், இரும்புக்கம்பியால் தந்தையை அடித்துக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் கேரளாவில் நடைபெற்றுள்ளது.
கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டம் கோடனூரைச் சேர்ந்தவர் ஜாய்(60). இவரது மகன் ரிஜோ(25). இவர் வெல்டிங் கடையில் வேலை செய்து வருகிறார் . இவர் நேற்று மது அருந்தி விட்டு மாலை நேரம் வீட்டிற்கு வந்துள்ளார். போதையில் படுத்துறங்கிய ரிஜோ, தன்னை காலை 8 மணிக்கு எழுப்புமாறு தந்தை ஜாயிடம் கூறியுள்ளார். ஆனால், இதை ஜாய் மறந்து விட்டார். இன்று காலை 8.15 மணிக்கு ரிஜோவை அவரது தந்தை ஜாய் எழுப்பியுள்ளார்.
இதனால் உறக்கம் கலைந்து எழுந்த ரிஜோ, நேரத்தைப் பார்த்தார். காலை 8.15 மணியாகிறது. இதனால் அவரது தந்தையுடன் சண்டை போட ஆரம்பித்தார். நான் சொன்ன நேரத்தில் ஏன் என்னை எழுப்பவில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரிஜோ, அங்கிருந்த இரும்புக்கம்பியை எடுத்து அவரது தந்தை ஜாயை தலையில் சரமாரியாகத் தாக்கினார்.
இதனால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து ஜாய் இறந்து போனார். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார், ரிஜோவை கைது செய்தனர். பெற்ற தந்தையை மகன் அடித்துக் கொலை செய்தசம்பவம் திருச்சூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.