போதை பவுடர் விற்பனையை கண்காணிக்கும் வகையில் வட மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் தீவிர சோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார்.
சென்னையில் போதை பவுடர் விற்பனை பெருமளவில் நடைபெற்று வருகிறது. அண்மையில் மணிப்பூர் மாநிலத்திலிருந்து 9 கிலோ மெத்தம் பெட்டமைன் போதை பவுடர் கடத்தி வந்த சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரை சேர்ந்த ராஜ்குமார், சந்திரசேகர் ஆகிய 2 பேரை, தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கடற்கரையில் போதை பவுடர் பதுக்கி வைத்து அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்த நான்கு நபர்களை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, ‘’பர்மாவிலிருந்து, போதைப்பொருளை கடத்தி, மணிப்பூர் வந்து அங்கிருந்து ரயில் மூலம் கடத்தி வந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கல்லூரிகள், கேளிக்கை விடுதி பார்ட்டி நடக்கும் இடங்களுக்கு ஒரு கும்பல் விற்பனை செய்து வருகிறது.
இதுவரை, சென்னையில் இந்த அளவிற்கு போதை பவுடர் பிடித்தது இல்லை. முதல்முறையாக அதிக அளவு பறிமுதல் செய்தது இதுதான். கடந்த வாரம் 335 கிராம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவலின்பேரில், மணிப்பூரை சேர்ந்த முக்கிய குற்றவாளியை தேடி வருகிறோம்.
ரயில் மூலம் கடத்தி வருவதை தடுக்கும் விதமாக ரயில்வே போலீஸார் வட மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் தீவிர சோதனையை மேற்கொள்ளவுள்ளனர். தற்போது பிடிபட்ட போதை பவுடரின் மதிப்பு 1 கோடியே 80 லட்சம். ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யபடுகிறது. பிடிபட்டவர்கள் மீது இதுவரை எந்த வழக்கும் இல்லை. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் குறித்து விசாரணை செய்து, அவர்கள் 7 ஆண்டுகளில் ஏதேனும் சொத்துக்கள் வாங்கி இருந்தால், அதனை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.