மணநாளில் மட்டையான மாப்பிள்ளை; ஒட்டுமொத்தமாய் மாட்டிவிட்ட மணப்பெண்


மணவிழா சடங்கு -சித்தரிப்புக்கானது

மணநாளன்று குடிபோதையில் மயங்கி தாலிகட்டும் தருணத்தை தவறவிட்ட மணமகனுக்கு, ஏகப்பட்ட திருப்பங்களுடன் மணமகள் பாடம் கற்பித்த வினோத சம்பவம் பீகார் மாநிலத்தில் அரங்கேறி இருக்கிறது.

பகல்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் மண்டல். இவருக்கு மிர்ஸாபூரை சேர்ந்த நேஹா என்ற பெண்ணுக்கும் நிச்சயம் செய்யப்பட்டு, திருமணத்துக்கு நாள் குறிக்கப்பட்டது. ஆனால் மணநாளுக்கு முந்தைய தினம் பேச்சிலர் பார்டியின் பெயரில் நண்பர்களோடு குடி கும்மாளம் என்று போனதில் தாள முடியாத போதையில் விழுந்தார் சந்தோஷ்குமார்.

இதனால் மணமகளை மண்டபத்துக்கு வரவழைக்கும் மாப்பிள்ளையின் சடங்கையும் மறந்தார். அடுத்தநாள் வெகு தாமதமாகவே அவரால் கண் விழிக்க முடிந்தது. தான் செய்த தவறை உணர்ந்தவர், தன்னுடன் சியர்ஸ் கொண்டாடிய நண்பர்களையும் அழைத்துக்கொண்டு மணமகள் வீட்டாரை சமாதானப்படுத்த சென்றார். அங்கே அவருக்கான வரவேற்பு வேறுமாதிரியாக இருந்தது.

பேச்சுவார்த்தையில் மணமகளின் பெற்றோர் உடன்பட்ட போதும், சந்தோஷ்குமார் சவகாசமே வேண்டாம் என்பதில் மணமகள் நேஹா உறுதியாக நின்றார். வாழ்வின் முக்கிய நிகழ்வான திருமண நாளன்றுகூட நிதானமின்றி போதையில் விழுந்த ஒருவனுடன் சேர்ந்து வாழத் தயாரில்லை என்று தீர்மானமாக இருந்தார். அத்தோடு அவர் விடவில்லை. அடுத்து இன்னொரு அதிரடியிலும் இறங்கினார்.

பேச்சுவார்த்தை நடத்தவந்த சந்தோஷ்குமார் மற்றும் நண்பர்கள் இருந்த அறைக்கு பூட்டு போட்டவர், திருமணத்துக்காக நாங்கள் செலவழித்த தொகையை ஒப்படைத்துவிட்டு செல்லுமாறு தீர்ப்பு வாசித்தார். வேறுவழியின்றி உறவினர்களுக்கு போன்போட்டு பணத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு சந்தோஷ்குமார் கேட்க, அவர்களோ மறுத்துவிட்டனர். உன்னால் ஊரின் மானமே போச்சு என்று கைவிரித்தனர்.

அதற்குள் போலீசார் விரைந்து வந்தனர். நேஹா வீட்டில் பணயக் கைதிகளாக அடைபட்டிருந்த சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் இதனால் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சிக்கு ஆயுள் குறைவு. ’மதுவிலக்கு அமலில் இருக்கும் பீகார் மாநிலத்தில் உங்களுக்கு மட்டும் எப்படி மது கிடைத்தது’ என்று கேள்விகளால் குடைந்த போலீசார், சந்தோஷ்குமார் மற்றும் நண்பர்களை அள்ளிச் சென்றனர். போலீசாரை வரவழைத்ததும் மணமகளின் திருவிளையாட்டு என்பது பின்னர் தெரிய வந்தது.

மாப்பிள்ளை கனவில் மிதந்த சந்தோஷ் குமாரின் சந்தோஷம் குடியால் அழிந்துபோயிருக்கிறது. மணமகளை சமாதானப்படுத்த, சந்தோஷின் வருங்கால மாமியார் வீட்டுக்கு படையெடுத்தவர்களும் தற்போது ’மாமியார் வீட்டில்’ கம்பி எண்ணுகிறார்கள்.

x