மனைவி, மாமியார் வெட்டிக்கொலை: ஆண்மை பரிசோதனை செய்ததால் வங்கி ஊழியர் வெறிச்செயல்


மனைவி, மாமியார் கொலை

திருமணமான இரண்டே வாரங்களில் மனைவி, மாமியாரை தனது தந்தையோடு சேர்ந்து வங்கி ஊழியர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம், சென்னம்மா சர்க்கிள் பகுதியில் உள்ள சுப்பலட்சுமி நகரைச் சேர்ந்தவர் பிரசாத். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களது மகன் சரவணன் பி.டெக் படித்துள்ளார். இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத் வங்கியில் வேலை கிடைத்தது. இந்த நிலையில் சரவணனுக்கும், தெலங்கானா மாநிலம், வனபர்த்தியைச் சேர்ந்த வெங்கடேஸ்வரலு, ரமாதேவி ஆகியோரின் மகள் ருக்மணிக்கும்(20) கடந்த 1-ம் தேதி திருமணம் நடந்தது.

இந்நிலையில், அவர்கள் இருவருக்கும் முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், சரவணனுக்கு தாம்பயத்தில் ஈடுபாடு இல்லாத நிலையில் இரண்டு நாட்களாக இருந்துள்ளார். இதுகுறித்து ருக்மணி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அவர்கள் சரவணனிடம் இதுகுறித்து கேட்டதுடன், ஐதாராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவருக்கு ஆண்மை பரிசோதனையை நடத்தியுள்ளனர். அத்துடன் தங்களது மகளுக்கு முதலிரவு நடக்காதது குறித்து அக்கம் பக்கத்தில் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சரவணன், தனது பெற்றோருக்கு நடந்த விஷயங்களைத் தெரிவித்துள்ளார்.

தனது மகனை அவமானப்படுத்திய மருமகள் குடும்பத்தை கொலை செய்ய மகனுடன் சேர்ந்து பிரசாத் திட்டம் தீட்டினார். இதன்படி கர்னூலில் உள்ள தங்களது வீட்டிற்கு ருக்மணி மற்றும் அவரது பெற்றோரை சரவணன் நேற்று அழைத்து வந்தார். மாடிக்கு அழைத்துச் சென்று ருக்மணியை கத்தியால் வெட்டிக் கொன்றுள்ளார். அப்போது வீட்டு அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த ருக்மணியின் தந்தை வெங்கடேஸ்வரலு மற்றும் அவரது மனைவி ரமாதேவியை சரவணனின் தந்தை பிரசாத் கத்தியால் சரமாரியாக வெட்டினார். வெங்கடேஸ்வரலு உயிர் பிழைக்க ரத்தக்காயங்களுடன் வீட்டில் இருந்து தப்பி ஓடி விட்டார். ஆனால், அவர து மனைவி ரமாதேவி வீட்டிற்குள் சிக்கிகொண்டார். அவரை பிரசாத் வெட்டிக் கொலை செய்தார். வெங்கடேஸ்வரலுவின் அலறல் சத்தத்தைக் கேட்டக அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதனால் சம்பவ இடத்திற்கு கர்னூல் டிஎஸ்பி மகேஷ் தலைமையிலான போலீஸார் விரைந்து சென்று வெங்கடேஸ்வரலுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த ரமாதேவி, ருக்மணியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து சரவணன், அவரது தந்தை பிரசாத் ஆகியோரை கைது செய்தனர். திருமணமான இரண்டே வாரத்தில் மனைவி, மாமியாரை தனது தந்தையோடு சேர்ந்து வங்கி ஊழியர் கொலை செய்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x