தண்டவாளத்தில் அறுந்து விழுந்த உயர் அழுத்த மின்கம்பி; தப்பிய தொழிலாளர்கள்: ரயில்கள் நிறுத்தம்


ரயில்

நாகர்கோவில்- திருவனந்தபுரம் ரயில் வழித்தடத்தில் உயர் அழுத்த மின்கம்பி தண்டவாளத்தில் அறுந்து விழுந்தது. இதனால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றை அகற்றும் பணி நடந்து வருகிறது.

நாகர்கோவில்- திருவனந்தபுரம் ரயில் வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ஆங்காங்கே உயர் அழுத்த மின்கம்பி அமைப்புப் பணிகளும், புதிய தண்டவாளம் உருவாக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் பல்வேறு தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று வழக்கம்போல் பணிகள் நடந்து வந்தது. அப்போது பள்ளியாடி-இரணியல் ரயில் நிலையங்களுக்கு இடையேயான ரயில் வழித்தடத்தில் எதிர்பாராதவிதமாக ரயில் தண்டவாளத்தில் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அதில் இருந்து சிறிது தூரம் தள்ளியே தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் உடனே இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் நாகர்கோவில்-திருவனந்தபுரம் ரயில் வழித்தடத்தில் வந்து கொண்டிருந்த ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பணிகள் முடிவடைந்த பின்பு சில மணிநேரத்தில் ரயில் போக்குவரத்துத் தொடங்கும் என ரயில்வே துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

x