திருச்சி இளைஞர் கரோனாவுக்கு பலியானதன் பின்னணி!


கரோனா வைரஸ் -சித்தரிப்புக்கானது

தமிழ்நாட்டில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதன் மத்தியில், 4 மாத இடைவெளியில் திருச்சி இளைஞர் ஒருவர் கரோனாவுக்கு பலியாகி இருப்பது புதிய கவலையை தந்துள்ளது.

நேற்று முன்தினம் திருச்சி சிந்தாமணியை சேர்ந்த உதயகுமார் என்ற 27 வயது இளைஞர் கரோனா பாதிப்பால் காலமானார். தனது பெங்களூரு நண்பர்களுடன் கோவா பயணம் சென்று திரும்பிய நிலையில் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை துரிதம் பெறும் முன்னரே அவர் பரிதாபமாக இறந்தார். முன்னதாக அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனைக்கான முடிவுகள், அவர் இறந்த பின்னரே வெளியாகி, உதயகுமார் கரோனா தொற்றுக்கு ஆளாகி இருந்ததை உறுதி செய்தன.

கடந்த நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் கரோனா பலி பதிவான நிலையில் அதன் பின்னர் தொற்று வெகுவாக குறைந்து வந்தது. குளிர் மற்றும் மழைக்காலங்களில் மக்கள் மத்தியில் பரவும் காய்ச்சலுக்கு மத்தியிலும், ஒற்றை இலக்கத்தில் மட்டுமே கரோனா தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் உயிருக்கு ஆபத்தின்றி சிகிச்சையில் குணமானார்கள். இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக கரோனா தொற்று இரட்டை இலக்கத்துக்கு எகிறி இருக்கிறது. அதிலும் 27 வயதேயான திருச்சி இளைஞர் கரோனாவுக்கு பலியாகி இருப்பது புதிய ஐயங்களை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக இணைநோய்கள் ஏதும் அந்த இளைஞருக்கு இல்லாத நிலையில், அவர் கரோனாவுக்கு பலியாகி இருந்தார். இது தொடர்பான ஐயங்களுக்கு தற்போது தமிழக அரசு விளக்கம் தந்துள்ளது. உதயகுமாருக்கு கரோனாவுடன், பன்றிக் காய்ச்சல் பாதிப்பும் ஒருசேர தாக்கியதே, அவரது மரணத்துக்கு காரணம் என தெளிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் அதிகரிக்கும் கரோனா மட்டுமன்றி பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட இதர வைரஸ் காய்ச்சல்களிடம் இருந்தும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

x