ஸ்ரீரெங்கத்தில் டயர் வெடித்து கார் விபத்திற்கு உள்ளானதில் நடைமேடையில் படுத்து இருந்த, மூன்று யாசகர்கள் பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
108 வைணவத் தலங்களில் ஒன்றான ஸ்ரீரெங்கம், ரெங்கநாதர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்துச் செல்வது வழக்கம். இந்தக் கோயிலுக்குச் செல்லும் வழியிலேயே மாம்பழச் சாலையில் அம்மா மண்டபம் உள்ளது. காவிரிக் கரையில் அமைந்துள்ள இதன் முன்பு முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். அந்தப் பகுதிகளில் ஏராளமான யாசகர்களும் தங்கி இருப்பது வழக்கம். அவர்களுக்கு, முன்னோர்களுக்கு திதி கொடுக்க வருபவர்கள் உணவு மற்றும் நிதி உதவியும் செய்வார்கள்.
இதனால் இங்கு குவிந்திருக்கும் யாசகர்கள் அம்மா மண்டபம் பகுதியிலேயே நடைமேடை மற்றும் கடைகளின் வாசல்களில் இரவுப்படுத்து தூங்குவது வழக்கம். இதேபோல் நேற்று இரவும், அம்மாமண்டபம் நடைமேடைப் பகுதியில் யாசகர்கள் தூங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக நள்ளிரவு 12.30க்கு வந்த சொகுசுகாரின் முன்பக்க டயர் வெடித்து, கார் நிலை குலைந்தது.
ஒருகட்டத்தில் கார் நடைமேடையில் ஏறியது. இதில் நடைமேடையில் படுத்து இருந்த யாசகர்கள் மீது கார் ஏறி இறங்கியது. இதில் ஒரு யாசகர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மேலும் படுகாயம் அடைந்த மற்ற யாசகர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி இன்று காலையில் இரு யாசகர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
இவர்கள் அங்கு யாசகம் எடுத்து வாழ்வை ஓட்டி வந்தவர்கள் என்பதால் இறந்தவர்கள் குறித்த பெயர், ஊர் விபரங்கள் எதுவும் தெரியவில்லை. இதனிடையே விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டிவந்த திருச்சி காந்தி மார்க்கெட்டை சேர்ந்த லெட்சுமி நாராயணன், காரில் இருந்த அவரது நண்பர் அஸ்வந்த் ஆகியோரை அப்பகுதிவாசிகள் பிடித்து அடித்தனர். போலீஸார் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடைபாதையில் படுத்திருந்த யாசகர்கள் மூவர் கார் விபத்தில் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.