புகார் கொடுக்க வந்த பெண் பலாத்காரம்; கொலை செய்யவும் துணிந்த போலீஸ் அதிகாரி!


கேரளத்தில் தன்னிடம் புகார் கொடுக்க வந்த பெண்ணை பலாத்காரம் செய்து, அது வெளியே தெரியாமல் இருக்க கொலை முயற்சியிலும் ஈடுபட்ட காவல்துறை ஆய்வாளர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டம் குற்றப்பிரிவு ஆய்வாளராக இருந்தவர் சிவசங்கரன். இவர் இதற்கு முன்பு பாலக்காட்டில் சட்டம், ஒழுங்கு ஆய்வாளராக இருந்தார். அப்போது கணவன், மனைவி தகராறு தொடர்பாக பெண் ஒருவர் புகார் கொடுத்தார். ஆனால் அந்த பெண்ணிடம் அன்பாக பழகுவது போல் பழகி தன் வலையில் வீழ்த்தி வெளியே அழைத்துச் சென்றார். அப்போது அந்தப் பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்தார் ஆய்வாளர் சிவசங்கரன். அதை வீடியோ எடுத்தும் மிரட்டி, பலமுறை பலாத்காரம் செய்தார்.

ஒருகட்டத்தில் பாதிக்கப்பட்ட பெண் பாலக்காடு எஸ்.பி அலுவலகத்தில் இதுதொடர்பாகப் புகார் கொடுத்தார். இதனால் கோபமடைந்த இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், அந்த பெண்ணை பின்னர் கார் ஏற்றிக் கொல்லவும் முயற்சி செய்தார். அப்பெண் அதிலிருந்து அதிர்ஷ்டவசமாகத் தப்பினார்.

இவை குறித்தெல்லாம் கேரள டி.ஜி.பி அனில்காந்த் விசாரணை நடத்தி, சிவசங்கரனை டிஸ்மிஸ் செய்து நேற்று உத்தரவிட்டார். ஏற்கனவே நான்குமுறை பணியிடை நீக்கம், பலமுறை துறைரீதியான நடவடிக்கைக்கும் உள்ளான சிவசங்கரன் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

x