விமானத்தில் 64 கோடி ஹெராயினுடன் வந்த முதியவர்: எத்தியோப்பியன் ஏர்லைன்ஸில் சென்னை வந்தவர் சிக்கினார்!


போதைப் பொருள் பறிமுதல்

எத்தியோப்பியா நாட்டு தலைநகர் அடீஸ் அபாபாவிலிருந்து, கடத்தி வரப்பட்ட 64 கோடி மதிப்புடைய 8.26 கிலோ ஹெராயின் போதைப்பொருளை சென்னை விமான நிலையத்தில், மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட மும்பையைச் சேர்ந்த 79 வயது முதியவரை கைது செய்தனர்.

எத்தியோப்பியா நாட்டு தலைநகர் அடீஸ் அபாபாவிலிருந்து, எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு, நேற்று காலை வந்தது. அந்த விமானத்தில் பெருமளவு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக, சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய் துறையின் தனிப்படை பிரிவினர், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு சாதாரண பயணிகள் போல் வந்து, தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து, மும்பையைச் சேர்ந்த 79 வயது முதியவர் ஒருவர், சுற்றுலாப் பயணிகள் விசாவில் ஆப்பிரிக்கா நாடுகளுக்கு சென்றுவிட்டு, இந்த விமானத்தில் எத்தியோப்பியா வழியாக சென்னை வந்தார். அவர் மீது மத்திய வருவாய் புலனாய் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர்.

அதன்பின்பு அவருடைய உடமைகளை சோதனை செய்தனர். அவருடைய சூட்கேஸுக்குள் மறைத்து வைத்திருந்த, 2 பார்சல்களில், 8.26 கிலோ ஹெராயின் போதை பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அந்த ஹெராயின் போதை பொருள் பார்சல்களை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

ஹெராயின் போதை பொருள், ஒரு கிலோ ரூபாய் 8 கோடியாகும். இது 8 கிலோ 26 கிராம் ஹெராயின் போதை பொருளின் மொத்த மதிப்பு ரூபாய் 64 கோடி. இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், அந்த 79 வயது முதியவரை கைது செய்தனர். அவர் கொண்டு வந்த ரூபாய் 64 கோடி மதிப்புடைய ஹெராயின் போதைப்பொருளையும் பறிமுதல் செய்தனர்.

இந்த முதியவர் சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்று தெரிய வருகிறது. சர்வதேச போதைக்கும்பல், வழக்கமாக பெண்கள், இளைஞர்கள் போன்றவர்களை, இதைப் போன்ற பெரிய அளவிலான போதை பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தி வந்தனர். ஆனால் அவர்கள் அடிக்கடி பிடிபட்டு விடுகின்றனர்.

எனவே சர்வதேச போதை கடத்தும் கும்பல், இதைப் போன்ற வயது முதிர்ந்த முதியவர்களை பயன்படுத்தி, புதிய முறையில் போதை பொருள் கடத்தலுக்கு பயன்படுத்துகின்றனர் என்று தெரிய வந்துள்ளது. முதியவர் யாருக்காக இந்த கடத்தலில் ஈடுபட்டார்? என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x