சென்னையை அடுத்த புழல் பகுதியில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புழல் பகுதியை சேர்ந்தவர் ரிதம். இவருக்கு திருமணமாகி 3 மாத பெண் குழந்தை உள்ளது. ரிதம் அதேப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதேபோல அதே பகுதியை சேர்ந்தவர் விஜய். சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்.
நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று இரவு புழல் லட்சுமி அம்மன் கோவில் 4-வது தெருவில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், ரிதம் மற்றும் விஜய் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டாலின் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரிதம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக புழல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன்ர். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் கடந்த ஜனவரி மாதம் அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்பவரை ரிதம் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
இந்த முன்விரோதம் காரணமாக சூர்யாவின் நண்பர்களான டேனியல், டில்லிபாபு ஆகிய 2 பேரும் ரிதம் மற்றும் விஜய் இருவரையும் வெட்டியது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.