தன்னை விட மூத்த பெண்ணுடன் தொடர்பு: கண்டித்த தந்தையைக் கட்டையால் தாக்கி வீடியோ கால் எடுத்த மகன்


தந்தையை தாக்குவதை வீடியோ காலில் எடுத்த மகன்

தன்னை விட வயதிற்கு மூத்த பெண்ணுடன் உறவில் இருந்ததைக் கண்டித்த தன் தந்தையைக் கட்டையால் தாக்கி அதை வீடியோ கால் மூலம் காதலிக்கு காட்டிய மகனை போலீஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் சித்தூரைச் சேர்ந்தவர் டெல்லிபாபு. ஹோம்கார்டாக வேலை செய்கிறார். அவரது மகன் பரத்(21). இவர் ஜான்சி(39) என்ற பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். இதை பரத்தின் தந்தை டெல்லிபாபு கண்டித்துள்ளார். இதனால் தந்தை, மகனுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனது மகன் வயது மூத்த பெண்ணுடன் உறவில் இருப்பது குறித்து போலீஸில் டெல்லிபாபு புகார் அளித்தார். இதையடுத்து பரத்தை அழைத்து போலீஸார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

ஆனாலும், ஜான்சியுடனான தொடர்பை பரத் கைவிடவில்லை. இதனால் மீண்டும் பிரச்சினை வெடித்துள்ளது. தனது உறவிற்குத் தந்தை தடையாக இருப்பதால் ஆத்திரமடைந்த பரத், கட்டையால் அவரைக் கடுமையாகத் தாக்கினார். இதனால் ரத்த வெள்ளத்தில் அவரது தந்தை துடித்துள்ளார். அப்போது தனது செல்போனில் வீடியோ காலில் ஜான்சிக்கு இந்த காட்சியை பரத் காட்டியுள்ளார். இந்த சம்பவம் அறிந்த அக்கம் பக்கத்தினர் டெல்லிபாபுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து அவர் சித்தூர் டவுன் காவல் நிலைய போலீஸாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து பரத்தை போலீஸார் நேற்று கைது செய்து செய்தனர். அத்துடன் ஜான்சியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சித்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x