நாய்க்கு பயந்து கோயிலுக்குள் படுத்து தூங்கிய இரண்டு திருடர்களை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் நிகழ்ந்திருக்கிறது.
தருமபுரி அடுத்த மான்காரன்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ளது சிவன் கோயில். இந்த கோயிலின் பூட்டு இன்று அதிகாலை உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது கோயிலுக்குள் சென்று பார்த்தபோது இரண்டு பேர் தூங்கிக் கொண்டிருப்பதை பொதுமக்கள் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து இருக்கின்றனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இரண்டு பேரையும் பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது இரண்டு பேரும் கோயிலுக்குள் திருட வந்திருக்கின்றனர். அந்த நேரத்தில் நாய்கள் தொல்லை இருந்ததால் கோயிலுக்குள்ளே படுத்து தூங்கியது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அவர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோயிலுக்குள் திருட சென்ற கொள்ளையர்கள் நாய் பயத்தால் அங்கேயே படுத்து உறங்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.