மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சுவற்றில் மோதியதில் புது மாப்பிள்ளை உயிர் இழந்த சம்பவம் உடன்குடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகில் உள்ளது ஜேஜே நகர். இந்தப் பகுதியைச் சேர்ந்த மிக்கேல்(25) என்பவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இவர் கடல் தொழிலுக்குச் சென்றுவந்தார். நேற்று இரவு மிக்கேல் வேலை விஷயமாக உடன்குடி வரை தன் மோட்டார் சைக்கிளில் சென்றார். இவரோடு அதே பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் மணிகண்டனும் சென்று இருந்தார்.
காலங்குடியிருப்புப் பகுதியில் மிக்கேல் பைக்கை ஓட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் உள்ள ஒரு சுவற்றில் மோதியது. இதில் பைக்கை ஓட்டிவந்த மிக்கேல், பின் சீட்டில் இருந்த மணிகண்டன் இருவருமே தூக்கி வீசப்பட்டனர். அக்கம், பக்கத்தினர் இருவரையும் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மிக்கேல் பரிதாபமாக உயிர் இழந்தார். இதேபோல் மணிகண்டனும் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து குலசேகரன்பட்டிணம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணம் முடிந்து மூன்றே மாதத்தில் புதுமாப்பிள்ளை சாலைவிபத்தில் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.