திருநெல்வேலியில் இருந்து சென்னையை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து சாப்பிடுவதற்காக உணவகம் ஒன்றில் நிறுத்திய இடைவெளியைப் பயன்படுத்தி மர்மநபர் பத்து லட்ச ரூபாயைக் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ரூபன்(42). இவர் மானூர் பகுதியில் பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார். இதேபோல் சென்னையில் கியாஸ் நிறுவன வினியோகஸ்தராகவும் உள்ளார்.
இவர் சென்னையில் வங்கி ஒன்றில் நகைகளை அடகு வைத்து இருந்தார். அந்த நகைகளைத் திருப்ப பத்து லட்சம் ரொக்கப்பணத்தை எடுத்துக்கொண்டு தனியார் ஆம்னி பேருந்தில் சென்னைக்குச் சென்றார். அந்தப் பணத்தை பயணிகள் பொருள்களை வைக்கும் பகுதியில் ஒரு பையில் போட்டு வைத்து இருந்தார்.
கயத்தாறு அருகே கரிசல்குளம் பகுதியில் ஆம்னி பேருந்து இரவு சாப்பிட நின்றது. அப்போது ரூபன் இறங்கி டீ குடிக்கச் சென்றார். அவர் திரும்பி வந்து பார்த்தபோது பத்து லட்சம் ரூபாய் வைத்து இருந்த பையைக் காணவில்லை. இதனைத் தொடர்ந்து ரூபன் கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் சோதனை செய்து பார்த்தபோது பேருந்தில் சிசிடிவி கேமிரா வசதியும் இருந்தது. அதில் 30 வயது மதிக்கத்தக்க சக பயணி ஒருவர், ஆம்னி பேருந்தில் பையைத் திருடுவது பதிவாகி இருந்தது. ஆம்னி பேருந்தில் அவர் புக் செய்திருந்த பெயர், முகவரியைத் தேடி தனிப்படை போலீஸார் திருவாரூர் விரைந்துள்ளனர்.