பயிரை மேய்ந்த வேலி: தொழிலதிபரைத் தாக்கி 5.30 லட்சம் கொள்ளையடித்த 3 போலீஸார் கைது


கொள்ளையில் ஈடுபட்ட போலீஸார்.

தொழிலதிபரைத் தாக்கி 5.30 லட்ச ரூபாயைக் கொள்ளையடித்த 2 காவல்துறை அதிகாரிகள் உள்பட மூன்று போலீஸார் கைது செய்யப்பட்ட சம்பவம் கான்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள டெஹாட் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சாப்ட்வேர் பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். நேற்று இவர் கான்பூரில் உள்ள சச்சென்டி சாலையில் காரில் சென்ற போது மூன்று பேர் தடுத்து நிறுத்தியுள்ளனர். அத்துடன் அவரைத் தாக்கி அவரிடமிருந்த 5.30 லட்ச ரூபாயைப் பறித்தனர். இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று அவர்கள் மிரட்டி விட்டுத் தப்பிச்சென்றனர்.

ஆனாலும், பாதிக்கப்பட்ட தொழிலதிபர், சச்சென்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அதிர்ச்சி அடைந்தனர். தொழிலதிபரிடமிருந்து 5.30 லட்சத்தைக் கொள்ளையடித்தது காவல் துறை உதவி ஆய்வாளர் தரேகா யதீஷ்குமார், துணை ஆய்வாளர் ரோஹித் சிங், தலைமைக் காவலர் அப்துல் ராஃப் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்திய போது, தொழிலதிபரிடம் கொள்ளையடித்தை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.

போலீஸ் பிடியில் கொள்ளையர்கள்.

இதையடுத்து இவர்களை இடைநீக்கம் செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி விஜய் துல் தெரிவித்தார். அத்துடன் அவர்களைக் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர். தலைமைக்காவலர் அப்துல் ராஃப் தான் இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டவர் என்றும், இவரது திட்டத்தின்படியே காவல் துறை உயர் அதிகாரிகள் இருவர் இணைந்து தொழிலதிபரிடம் கொள்ளைடியத்ததும் தற்போது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள தலைமைக்காவலர் அப்துல் ராஃப் கோடீஸ்வரர் என்பது குறிப்பிடத்தக்கது.

x