`துபாய் ரெஸ்ட்டாரன்டை குத்தகைக்குத் தருகிறோம்'- முதியவரிடம் 30 லட்சம் மோசடி செய்த மதுரை தம்பதி


துபாயில் ரெஸ்ட்டாரன்டை குத்தகைக்கு தருவதாக அருப்புக்கோட்டை முதியவரிடம் 30 லட்சம் மோசடி செய்த மதுரை தம்பதி மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நாராயணசுவாமி தெருவைச் சேர்ந்தவர் சுப்புராஜ். இவரது மருமகன் மணிவண்ணன். எம்பிஏ பட்டதாரியான இவர், ஓசூரில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில், துபாயில் நடத்தி வரும் ரெஸ்ட்டாரன்டை குத்தகைக்கு விடுவது தொடர்பாக மதுரை பழங்காநத்தம் அழகப்பா நகரைச் சேர்ந்த நாராயணசாமி, சுப்புராஜிடம் 30 லட்சத்திற்கு கடந்த 2019-ல் விலை பேசினார்.

மணிவண்ணன், துபாயில் தங்குவதற்கு விசா வாங்கித் தருவதாகவும் உறுதியளித்தார். இந்த ஆசை வார்த்தைகளை நம்பிய சுப்புராஜ் 30 லட்சத்தை நாராயணசாமி, இவரது மனைவி ஜீவா, இவர்களது மகன் ஸ்ரீராம் ஆகியோரது வங்கிக் கணக்கிற்கு அனுப்பினார்.

இதன் பின்னர் மணிவண்ணனை துபாய்க்கு அழைத்து 3 மாதம் மட்டும் தங்க ரெஸ்ட்டாரன்டை குத்தகை அடிப்படையில் ஒப்படைக்காமல் ஏமாற்றினர். இது தொடர்பாக விருதுநகர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் எண் 2-ல் கடந்த 2019-ல் சுப்புராஜ் வழக்கு தொடர்ந்தார். வழக்குப் பதிவு செய்ய 2019 அக்.3-ல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை 2022 ஜூன் 21-ல் உத்தரவிட்டது.

இதனடிப்படையில், நாராயணசாமி (60), இவரது மனைவி ஜீவா (அ) கங்காதேவி (56), இவர்களது மகன் ஸ்ரீராம் (30) ஆகியோர் மீது மோசடி உள்பட 2 பிரிவின் கீழ் விருதுநகர் மாவட்டம் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

x