மீனாட்சி அம்மன் கோயில் தரிசனத்துக்காக மதுரை விமான நிலையம் வந்திறங்கிய ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
மாசி மகாசிவராத்திரியை முன்னிட்டு, கோவை ஈஷா மையத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று செல்கிறார். செல்லும் வழியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தந்தார். இதற்காக, டில்லியில் இருந்து இந்திய விமானப்படைக்குச் சொந்தமான தனி விமானம் மூலம் இன்று காலை 9 மணிக்கு மதுரை புறப்பட்டார்.
நண்பகல் 11:45 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்த ஜனாதிபதியை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். தமிழக சுற்றுலா துறை அமைச்சர் மனோஜ் தங்கராஜ், கலெக்டர் அனீஷ்சேகர், மாநகர் போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உள்ளிட்டோரும் ஜனாதிபதியை வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து கார் மூலம் புறப்பட்டு மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்தார். அங்கு அவருக்கு பூரண கும்பமரியாதை அளிக்கப்பட்டது. சுவாமி தரிசனத்திற்கு பின், சிறப்பு விருந்தினர் இல்லத்தில் மதிய உணவை முடிக்கும் ஜனாதிபதி முர்மு, மதியம் 2 மணியளவில் மதுரை விமான நிலையம் சென்று, அங்கிருந்து கோவை செல்கிறார்.