அண்ணா பல்கலைக்கழகத்தில் சட்டவிரோதமாக பணிநியமனம்: நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு


அண்ணா பல்கலைக் கழகம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் சட்டவிரோதமாக பணிநியமனம் பெற்ற உதவிப் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு உதவிப் பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் ஆறு பேர், முறையான தேர்வு நடைமுறைகளை எதிர்கொள்ளாமல், சட்டவிரோதமாக நியமனம் பெற்று பணியில் நீடிப்பதாக கூறி, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நந்தனம் கல்லூரிகள் அறக்கட்டளை நிர்வாகி மோகன் கிருஷ்ணா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், 'இந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையும், அமலாக்கப் பிரிவும் 2018-ம் ஆண்டே வழக்குப்பதிவு செய்துள்ளபோதும், இதுவரை அந்த ஆறு உதவிப் பேராசிரியர்களுக்கு எதிராக அண்ணா பல்கலைக்கழகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுநாள் வரை அவர்கள் ஊதியம் உள்ளிட்ட சலுகைகளைப் பெற்று வருகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர்களுக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அந்த ஆறு உதவிப் பேராசிரியர்களும் தொடர்ந்து பணியில் நீடிப்பதை தடுக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தி தண்டிப்பதுடன், குற்ற நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணையை பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, இரு வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளது.

x