ஃபேஸ்புக் விளம்பரத்தால் பறிபோன 12 லட்சம் ரூபாய்: தூத்துக்குடி சைபர் க்ரைமில் சிக்கிய குற்றவாளி


தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு

தூத்துக்குடியை சேர்ந்த ஒருவர் முகநூலில் பிட்காயின் சம்பந்தமான விளம்பரம் மூலமாக இணையத்தில் 12 லட்சம் ரூபாய் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டார். இது தொடர்பாக தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு தனிப்படை போலீஸார் துரிதமாக விசாரணை நடத்தி குற்றவாளியை கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வாவல்தோத்தி பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் ராமர் (48) என்பவரின் முகநூல் கணக்கில் பிட்காயின் இன்வெஸ்ட்மெண்ட் சம்பந்தமாக விளம்பரம் ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து ராமர் அதிலிருந்த லிங்கை கிளிக் செய்து அதில் குறிப்பிட்டுள்ள வாட்ஸ்-அப் எண்ணில் தொடர்பு கொண்டு, பின்னர் அவர்கள் கொடுத்த Protonforex.com என்ற இணையத்தில் ரூபாய் 12,10,740/- முதலீடு செய்துள்ளார்.

இதனையடுத்து தான் மோசடி செய்யப்பட்டு ஏமாற்றப்பட்டதை அறிந்த ராமர், தேசிய சைபர் குற்றங்கள் பிரிவில் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார். ராமர் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர் சுதாகர் உட்பட போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து மோசடி நபரைக் கண்டுபிடித்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில், மேற்படி தனிப்படை போலீசார் தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டதில் ராமரிடம் மோசடி செய்தது கோயம்புத்தூர் சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாமிராஜ் மகன் கருணாகரன் (32) என்பது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படையினர் நேற்று கோயம்புத்தூர் சென்று கருணாகரனை கைது செய்தனர். மேலும், அவரிமிருந்து ரூபாய் 5 லட்சம் பணம், ஒரு ஸ்கோடா கார், ஆப்பிள் லேப்டாப் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து தூத்துக்குடி அழைத்து வந்து, தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மேலும் அவரது வங்கி கணக்கிலிருந்த ரூபாய் 9,98,865/-யும் முடக்கம் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வழக்கில் தனிப்படை போலீசார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை நடத்தி, குற்றவாளியைக் கண்டுபிடித்து கைது செய்த தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டினார்.

x