முறைகேடுகள் எதிரொலி: விருதுநகர் மாவட்டத்தில் 14 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிக ரத்து


வெடிவிபத்தில் சேதமான பட்டாசு ஆலை.

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு இருப்பு உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்ட 14 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி பகுதிகளில் ஜன.14 மற்றும் 19-ம் தேதிகளில் மூன்று பட்டாசு ஆலைகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் மத்திய பிரதேச மாநில தொழிலாளர் இருவர், ஒரு பெண் உள்பட 8 பேர் பலியாகினர். இந்த விபத்துகளில் தீக்காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மதுரை, சிவகாசி அரசு மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் குணமடைந்தவர்கள் வீடு திரும்பி வருகின்றனர்.

இதை தொடர்ந்து பட்டாசு ஆலைகளில் அதிகாரிகள் சோதனை நடத்திய, சட்ட விரோதமாக கருந்திரி மருந்து பதுக்கிய 11 பேரை கடந்த மாதம் கைது செய்தனர். பட்டாசு ஆலைகளில் விதிமீறல் தொடர்பாக சாத்தூர், வெம்பக்கோட்டை, சிவகாசி ஆகிய பகுதிகளில் சிறப்புக்குழு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆலைகளில் அதிகளவு பட்டாசு இருப்பு, உள்ளிட்ட முறைகேடுகள் தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகளின் ஆய்வறிக்கை அடிப்படையில் வெம்பக்கோட்டையில் 8, சிவகாசியில் 3, திருவில்லிபுத்தூரில் 2, சாத்தூரில் 1 என 14 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x