பழநி முருகன் கோயில் கும்பாபிஷேகம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்


பழநி முருகன் கோயில் கும்பாபிஷேகம்

பழநி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அரோகரா கோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழ்க்கடவுள் முருகனின் ஆறு படை வீடுகளில் மூன்றாம் படை வீடாக பழநி முருகன் கோயில் போற்றப்படுகிறது. இங்குள்ள நவபாஷான மூலவர் தண்டாயுதபாணியை வணங்கினால் தீராத நோய்கள் குணமாகும் என்பது ஐதீகம். இங்கு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்களின்போது பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை சென்று தண்டாயுதபாணியை வணங்கி செல்கின்றனர்.

இந்தநிலையில், பழநி முருகன் கோயில் கும்பாபிஷேகம் 16 ஆண்டுகளுக்கு பின், இன்று (ஜன.27) நடத்த கடந்த 2 மாதங்களாக திருப்பணிகள் நடந்தன. ஜன.18-ல் ராஜகோபுரம், உப சன்னதிகளில் கோபுர கலசங்கள் ஸ்தாபனம் செய்யப்பட்டன.

பழநி மலைக்கோயில் கும்பாபிஷேகத்தின்போது கோபுரங்கள் மீது மலர்கள் தூவிய ஹெலிகாப்டர்

ஜன.21-ல் கஜ, பரி பூஜைகள் நடந்தன. ஜன.23 மாலை முதல் கால யாக பூஜை தொடங்கியது. மலைக்கோயிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு நேற்று காலை 9.50 மணி முதல் நண்பகல் 11 மணிக்குள் கும்பாபிஷேகம் நடந்தது. இதைத் தொடர்ந்து இன்று காலை 8.15 மணிக்கு யாக சாலையில் இருந்து சக்தி கலசங்கள் புறப்பாடாகின.

இதனைத் தொடர்ந்து சிவாச்சார்யார்கள் தமிழில் வேதமந்திரங்கள் முழங்க, பக்தர்களின் அரோகரா எனும் சரவண கோஷம் ஒலிக்க ராஜகோபுரம், மூலவர் தங்க விமான கலசங்களில் 8.45 மணியளவில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதன்பின்னர் கோபுரங்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அப்போது, ராஜகோபுரத்தில் ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன.

பழநி மலைக்கோயில் கும்பாபிஷேகத்தை பச்சைகொடி அசைத்து துவக்கிவைத்து அமைச்சர்கள் சேகர்பாபு, அர.சக்கரபாணி

தேவாரம், திருப்புகழ் பாடப்பட்டன. கும்பாபிஷேக திருவிழாவை காண குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 2 ஆயிரம் பேர் உள்பட 6 ஆயிரம் பேர் கும்பாபிஷேகத்தை காண அனுமதிக்கப்பட்டனர். அசம்பாவிதங்களை தவிர்க்க பழநியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. போக்குவரத்து நெரிசலை குறைக்க புது தாராபுரம் சாலையில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டிருந்தது. ஒட்டன்சத்திரம், கோவை செல்லும் பஸ்கள் மாற்று வழியில் போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரண்டாயிரத்து 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அமைச்சர்கள் சேகர் பாபு, சக்கரபாணி, செந்தில்குமார் எம்எல்ஏ மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

x