புழல் அருகே வீட்டின் முன்பு நிறுத்தி் வைத்திருந்த சொகுசு கார் தீபிடித்து எரிந்து வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை புழல் புத்தகரம் பத்மாவதி நகரை சேர்ந்தவர் சதீஷ்கண்ணன்(41).
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் நேற்று இரவு வேலை முடிந்து வீட்டின் முன்பு தனது சொகுசு காரை நிறுத்தி விட்டு உறங்க சென்றுள்ளார். இன்று அதிகாலை வீட்டின் முன்பு நிறுத்தி் வைத்திருந்த கார் திடீரென தீபிடித்து எரிந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே சதீஷுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே சதீஷ் வெளியே ஓடிவந்து கார் தீப்பற்றி எரிவதை பார்த்து போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தார். தீயணைப்பு வாகனம் வருவதற்குள் தீ மளமளவென கார் முழுவதும் பரவி வெடித்து சிதறியது.
பின்னர் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் கார் முற்றிலும் எரிந்து நாசமாயின. அதிர்ஷ்டவசமாக தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்பட்டவில்லை. விபத்து குறித்து புழல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் கார் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக கார் தீப்பிடித்து எரிந்தது தெரியவந்துள்ளது.