ஊத்தங்கரை அருகே நகைக்கடையின் சுவற்றில் துளையிட்டு 30 சவரன் நகை, 25 கிலோ வெள்ளிப் பொருட்களைக் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரைச் சேர்ந்தவர் சேகர். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே நகைக்கடை வைத்துள்ளார். நேற்று இரவு வியாபாரம் முடிந்து கடையை சேகர் மூடிச்சென்றுள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை அவரது நகைக்கடையின் பின்பக்க சுவற்றில் துளையிடப்பட்டுள்ளதாக அவருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற சேகர் நகைக்கடையின் சுவர் துளையிடப்பட்டு உள்ளிருந்த 30 சவரன் நகை, 25 கிலோ வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சேகர், இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸில் புகார் அளித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு கிருஷ்ணகிரி கைரேகை நிபுணர்கள் உள்பட காவல் துறை அதிகாரிகள் நகைக்கடையை சோதனையிட்டனர். அப்போது சிசிடிவி கேமிராவிற்கான ஹார்ட்டிஸ்க் உள்ளிட்டவற்றையும் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகைக்கடையின் சுவற்றைத் துளையிட்டு கொள்ளை நடத்தப்பட்ட சம்பவம் ஊத்தங்கரைப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.