அன்றாடம் மலச்சிக்கல் இன்றி விடிய வேண்டும்; அன்றைய தினம் மனச்சிக்கல் இன்றி உறங்கச் செல்ல வேண்டும். ஒன்றுக்கொன்று தொடர்புடைய இந்த இரண்டுமே இல்லாத அன்றாடங்களே நம்மில் பலரின் ஏக்கங்களாக நீடிக்கின்றன. மலச்சிக்கலை உடல்நோய்களின் தாய் என்றே விளிக்கலாம். அந்தளவுக்கு இதர நோய்களையும் இது வரவழைத்து விடுகிறது. மலச்சிக்கல் இன்றி அன்றைய தினத்தை தொடங்கவும், அது தொடர்பான உடலின் இதர சிக்கல்களை தவிர்க்கவும் உரிய வழிகளை இங்கே பார்ப்போம்.
மலச்சிக்கலின் பெரும்பாடுகள்
கழிவுகள் நீங்காது தேங்கிப்போவதே உடலின் பெரும்பாலான நோய்களுக்கு முதல் காரணம் என்கிறது யோகா மற்றும் இயற்கை மருத்துவம். இந்த கழிவுகளில் பிரதானமானது மலம். மலச்சிக்கல் என்பது மலம் கழிப்பதில் சிரமத்தை உணர்வது மட்டுமல்ல, குறிப்பிட்ட இடைவெளியில் சுமுகமாக மலம் கழியாது இருப்பதையும் குறிக்கும். அதிலும் 3 தினங்களுக்கு மேலாக ஒருவர் மலம் கழியாது இருப்பின் அதனை நோயின் அறிகுறி என்றே சொல்லலாம்.
பெரும்பாலானோரின் மலச்சிக்கல் என்பது கழிவறையில் பெரும் போராட்டமாக நீடிக்கிறது. இயல்பாக நடக்கவேண்டியதற்கு மிகவும் மெனக்கிடுவார்கள். குடலில் ஏதோ அடைத்திருப்பதாக உணர்வார்கள். வாயுத்தொல்லை, வயிற்றில் பிடிப்பு, பசியின்மை, சோர்வு, சருமம் மிகவும் வறண்டிருப்பது மற்றும் வயிற்றில் குத்தல்களை உணர்வார்கள். கழிவறை செல்லவேண்டும் என்ற உந்துதலை உணர்வார்கள்; ஆனால் அதற்கான செயல்பாட்டில் பின்தங்கலை உணர்வார்கள். வெளிநடப்புக்கான சகல ஏற்பாடுகளிலும் தோல்வியே கிடைக்கும். இவையெல்லாம் பொதுவான அறிகுறிகள். மலச்சிக்கல் களைவதற்கான வழிமுறைகளில் உணவு, உடற்பயிற்சி, மருத்துவ ஆலோசனை என தேவையைப் பொறுத்து தீர்வுகள் நீளும்.
நீர் - நார்ச் சத்துகள்
மலச்சிக்கலை தவிர்க்க உடலுக்குத் தேவையான நீரை அன்றாடம் அருந்துவது அவசியம். தினத்துக்கு 3 முதல் 3.5 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். உட்கொள்ள வேண்டியதில் நீருக்கு அடுத்தபடியாக, நார்ச்சத்து முக்கியத்துவம் பெறுவதால் அதற்கான உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். உணவுகளின் நார்ச்சத்து குடல் இயக்கத்துக்கு அவசியமாகிறது. மேலும் இவை உணவில் உள்ள அதிகப்படி கொழுப்பை கழிவாக வெளியேற்றுவதிலும் உதவுகிறது.
எனவே நார்ச்சத்து உணவுகளை போதிய அளவு உட்கொள்ளும்போது மலச்சிக்கல் தொலைவதுடன், உடலின் கொழுப்பும் குறையவும் வாய்ப்பாகிறது. இந்த வரிசையில் குடல் புற்றுநோய்க்கான வாய்ப்புகளை தவிர்க்கவும் நார்ச்சத்துகள் உதவுகின்றன. அடுத்தபடியாக உடலின் சர்க்கரை அளவை பராமரிப்பதிலும் நார்ச்சத்துக்களுக்கு பங்குண்டு. இப்படி, நாலாவித நன்மைகள் பயக்கும் நார்ச்சத்தினை உடலுக்கு உறுதி செய்வது நம் கடமையாக அமையட்டும்.
இதர உணவு மற்றும் உடற்பயிற்சி
பழம், காய்கறி, கீரை, முழுதானியம், விதைகள் என எளிய உணவுகளில் இருந்தே அன்றாடம் உடலுக்குத் தேவையான நார்ச்சத்தினை நம்மால் வழங்க இயலும். உணவுக்கு அடுத்தபடியாக உடற்பயிற்சியும் மலச்சிக்கல் தீர்க்க உதவும். அன்றாடம் ஒரு மணி நேரமேனும் உடற்பயிற்சி செய்தாக வேண்டும். நடைப்பயிற்சி, மெல்லோட்டம் போன்றவை நல்லது. நேரமில்லை என்றவர்கள் வீட்டினுள்ளோ, மொட்டை மாடியிலோ ‘8’ போட்டும் உடற்பயிற்சி கடமையை தீர்க்கலாம். கூடுதலாக யோகா மற்றும் மூச்சுப்பயிற்சி பழகுவதும் உதவும். இவை, நமது உடலின் ஜீரணத்தை அதிகரிக்கவும், வயிற்று தசைகளின் இயக்கம் மற்றும் வலிமையை அதிகரித்து கழிவு வெளியேறவும் உதவும்.
இளநீர், மோர் உள்ளிட்ட நீர் ஆகாரங்களுக்கு முக்கியத்தும் தர வேண்டும். டீ, காபி ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். தற்போது பெரியவர்களுடன் சேர்ந்து குழந்தைகளும் காபி அருந்துவது பரவலாகி வருகிறது. காபியில் இருக்கும் காபீன் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்துக்கு உகந்ததல்ல. பெரியவர்களும் காபி அல்லது டீ குடித்தால்தான் கழிவறை செல்ல முடியும் என்ற கட்டாயத்துக்கு உடலை பழக்கி வைத்திருப்பார்கள். உடலின் நீரேற்றத்தை பாதிக்கும் டீ, காபியை குடிப்பது, தொடக்கத்தில் இயற்கை உபாதைக்கான உந்துதலை தரும்.
ஆனால் அதுவே நாள் போக்கில் மலச்சிக்கலுக்கும் மறைமுக காரணமாகிவிடும். அதிகம் டீ, காபி குடிப்பவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிப்பதை தூண்டி, உடலின் நீர் இருப்பு குறைத்து, மலச்சிக்கலுக்கு வாய்ப்பாகி விடும். காபீன் என்பதன் இயல்புபடி, தொடக்கத்தில் புத்துணர்வு அளித்தாலும், நாளடைவில் சோர்வடையச் செய்யும். இந்த வரிசையில் வாயு நிரம்பிய மென்பானங்களையும் தவிர்த்தாக வேண்டும். இந்த வாயு பானங்கள் உடலின் வாயு வெளியேற்றத்துக்கு காரணமாவதாக சொல்வார்கள். அது உண்மையல்ல. உடலின் வாயுத் தொந்தரவுக்கு இவை தீர்வும் அல்ல.
கொய்யா, திராட்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி உள்ளிட்ட பழங்கள் உண்ணலாம். குழந்தைகளுக்கு காய்ந்த திராட்சை மற்றும் பேரீட்சை ஆகியவற்றில் தலா நாலைந்து அப்படியே சாப்பிட செய்யலாம். பெரியவர்கள் வெள்ளை அரிசியை தவிர்ப்பது நல்லது. பட்டைதீட்டப்பட்ட அரிசி என்பது சத்துக்களை இழந்த ஸ்டார்ச் சக்கை மட்டுமே. இதனை உட்கொள்ளும்போது உடலின் சர்க்கரை அளவு உயரக் காரணமாகிறது.
மலச்சிக்கல் கண்டவர்கள் பால் பொருட்களை தவிர்ப்பது நல்லது. அவ்வாறு இயலாதவர்கள் பசும் பால் மட்டுமே அருந்தலாம். பால் பவுடர் மற்றும் அதில் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளின் மலச்சிக்கல்
குழந்தைகளை இளம் பருவத்திலேயே மலச்சிக்கல் இல்லாது பழக்குவது பெரியவர்கள் கடமை. விளையாட்டுத்தனம் மிகுந்த குழந்தைப் பருவத்தினர், மலம் கழிக்கச் செல்வதை தொந்தரவாக கருதுவார்கள். ஒத்திப்போட முயல்வதில் அதுவே பழக்கமாகி, மலம் கட்டுதலுக்கு ஆளாவார்கள். எனவே காலையில் எழுந்ததும் அவர்களுக்கான அன்றாட கடமையாக மலம் கழிப்பதை நினைவூட்டி பழக்குவது பெரியவர்கள் கடமை. ஓரிரு வாரங்கள் தொடர்ச்சியாக கண்காணித்து பழக்கினாலே அதற்கன நடைமுறை சுழற்சிக்கு குழந்தைகள் வந்துவிடுவார்கள். கூடுதல் கவனிப்பாக, அன்றாடம் போதிய நீர் அருந்தச் செய்வது, உணவில் நார்ச்சத்தினை உறுதி செய்வது, காலையில் எழுந்ததும் சிறிது வெந்நீர் பருகச் செய்வது போன்றவை மலம் கழித்தலை ஒழுங்குக்கு கொண்டுவரும்.
இப்படி மிகச்சாதாரணமாக தவிர்க்கக்கூடிய மலச்சிக்கலை தருவித்துக்கொள்ளும் குழந்தைகளுக்கு, இதர பிரச்சினைகளும் தலையெடுக்கும். பசியெடுக்காதது, வயிற்றில் பூச்சிகள் தங்குவது, இதர வயிற்று உபாதைகள், முகத்தில் தேமல் தோன்றுவது, உடல் இளைத்தல் மற்றும் காரணமின்றி காய்ச்சல் காணவும் செய்யும். தொற்றுகளுக்கு சதா ஆளாவார்கள். எனவே குழந்தைப் பருவத்தினரின் மலச்சிக்கலை எதன்பொருட்டும் அலட்சியப்படுத்தக் கூடாது.
வயதானவர்களின் மலச்சிக்கல்
வயதானர்களுக்கு விழிப்புணர்வு இருந்தபோதும் வயதின் பொருட்டான சிக்கல்கள், அவர்களுக்கான மலச்சிக்கல்களுக்கு காரணமாகி விடும். கீரைகள் உள்ளிட்ட நார்ச்சத்து மிகுந்த உணவுப்பொருட்களை உட்கொள்வது, அடிக்கடி மலம் கழிக்க உந்துதலாகும் என அவற்றை தவிர்க்க செய்வார்கள். இதுவே மலச்சிக்கலில் கொண்டுபோய் விடும். பார்க்கின்சன், தைராய்டு என இதர உடல் உபாதைகளுக்காக, அவர்கள் உட்கொள்ளும் மருந்துகள் காரணமாகவும் மலச்சிக்கல் நேரும். மன அழுத்தம் மற்றும் வலி நிவாரணிக்கான மருந்துகளின் பக்க விளைவாகவும் மலச்சிக்கல் நேரும்.
வயதானவர்களின் கடுமையான மலச்சிக்கலுக்கான தீர்வாக, குறிப்பிட்ட கால இடைவெளியில் குடலை சுத்தம் செய்துக்கொள்வது நல்லது. மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் பரிந்துரை அடிப்படையிலேயே இந்த எனிமா எடுத்துக்கொள்ள வேண்டும். இயற்கை மற்றும் யோகா மருத்துவரை அணுகும்போது, எனிமா வகைகளில் உரியதை பரிந்துரை செய்வார். இந்த முறையில் உடலுக்கு மலச்சிக்கலே வராது தீர்வு காணவும் வாய்ப்பாகும்.
கர்ப்பவதிகளின் உடலில் எழும் இயல்பான ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளே அவர்களுக்கு மலச்சிக்கலாகவும் தட்டுப்படலாம். இது தவிர்த்து சத்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வது, வயிற்றிலிருக்கும் குழந்தையின் அளவு பெரிதாவது, அதிகப்படி சோம்பல் காரணமாக மலம் கழிப்பதை ஒத்திப்போடுவது ஆகியவையும் மலச்சிக்கலுக்கு இட்டுச் செல்லும்.
மலச்சிக்கலின் பக்கவிளைவுகள்
மலச்சிக்கலுடன், மலவாயில் எரிச்சலையும் உணர்பவர்கள், இயற்கை மற்றும் யோகா மருத்துவரின் பரிந்துரையுடன் இடுப்புக் குளியல் எடுத்துக்கொள்வது தீர்வளிக்கும். மலச்சிக்கல் தீர்வதற்கான புள்ளிகளை தூண்டவும் இயற்கை மருத்துவர் உதவுவார். குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணிகள் என சகலமானோரும் செய்யக்கூடிய வஜ்ராசனமும் சிறப்பான உதவியாகும்.
உணவில் மசாலா மற்றும் காரம் அதிகம் சேர்ப்பவர்கள் அவற்றை குறைத்துக்கொள்வது நல்லது. இவர்களுக்கு எழும் மலச்சிக்கல் பிரச்சினைகள் நாளடைவில் பைல்ஸ் ஆகவும் தீவிரம் பெற வாய்ப்பாகும். இந்த தொந்தரவுகளை தவிர்க்க உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வது நல்லது. கற்றாழையை மோரில் கலந்து அருந்துவது உடலின் சூட்டைத் தவிர்க்க உதவுகிறது. நல்லெண்ணெயில் கலந்த அரோமா ஆயில், அடிவயிற்றில் தடவுவதுதும் மலச்சிக்கல் தீர உதவும்.