ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், பத்ராச்சலத்தில் கோதாவரி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், பத்ராத்ரி கொத்தகுடம் மாவட்டத்தில் உள்ள 110 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம், பத்ராச்சலத்தில் கோதாவரி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சேரலா, தும்முகுடம், பத்ராசலம், பர்காம்பஹாட், அஸ்வபுரம், மனுகூர் மண்டலங்களில் உள்ள கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தற்போது, பத்ராச்சலத்தில் கோதாவரி ஆற்றில் நீர்மட்டம் 51.40 அடியை எட்டியுள்ளதால், பத்ராச்சலம் வழியாக சத்தீஸ்கர் கிராமத்தை இணைக்கும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளன. எனவே அந்த சாலைகளை மூடி, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதனையடுத்து பத்ராசலத்தில் இரண்டாவது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணையின் நீர்மட்டம் 73 அடியை எட்டும் பட்சத்தில் அது 110 கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயத்தை ஏற்படுத்தும். இதையடுத்து வெள்ள சேதத்தை தவிர்க்க அரசுத் துறை அதிகாரிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.