திண்டுக்கல் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் அடைந்த தோல்வியால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் அருகே கருமண் கிணறு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் அருண் குமார் (24). கடந்த 3 நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில். தேடியும் இவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால் இவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கள்ளிமந்தையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அருண்குமாரை தேடி வந்தனர். இந்நிலையில், அப்பகுதியில் ஒரு கிணற்றில் வாலிபர் உடல் கிடப்பதாக போலீஸாருக்கு இன்று தகவல் கிடைத்தது.
அங்கு விரைந்த போலீஸார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றில் இருந்து வாலிபர் உடலை மீட்டனர். அவர் காணாமல் போன அருண் குமார் என தெரிந்தது. அவரது உடலை ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், அருண்குமார் செல்போன் மூலம் ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளையாடியது தெரிந்தது. அதில் அடைந்த தோல்வியால் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.