‘கொச்சி சர்வதேச கலை சங்கமம்’: கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது ஏன்?


கொச்சின் சர்வதேச கலை சங்கமம் எனப்படும் ’கொச்சின் பினாலே’ நிகழ்வு இன்று மாலை தொடங்குவதாக இருந்தது. தொடங்க சில மணி நேரமே இருந்த நிலையில், திடீரென நிகழ்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து வந்து கேரளத்தில் முகாமிட்டிருக்கும் கலைஞர்கள் இதனால் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சமகாலத்தின் கலைகளுக்காக உலகளவில் நடக்கும் ’வெனீஸ் பினாலே’ நிகழ்வு சர்வதேச பிரசித்திப் பெற்றது. அதே போன்று, கேரள மாநிலம் கொச்சியில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 'கொச்சி முசிறீஸ் பினாலே' எனும் கலை விழா நடத்தப்பட்டு வருகிறது.

சேர நாட்டின் பாரம்பரியமிக்க துறைமுகமான முசிறியை நினைவுகூரும் வண்ணம் முசிறீஸ் எனும் பெயரை கலை விழாவின் பெயரில் இணைத்திருக்கிறார்கள். கொச்சி பினாலே பவுண்டேசன் நடத்தும் இந்த விழாவானது, தெற்காசியாவிலேயே மிகப்பெரிய கலைச் சங்கமம் ஆகும். 2022 - 23-ஆம் ஆண்டிற்கான பினாலே, இன்று மாலை தொடங்கி 2023 ஏப்.10 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இதன் பணிகள் முழுமையாக முடியாததால், 11 நாட்கள் தாமதமாக வரும் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. புயலினால் பணிகள் தொய்வானதாகவும், அசெளரியங்களுக்கு மன்னிப்பு கோருகிறோம் எனவும் விழா ஏற்பாட்டுக் குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

கொச்சி பினாலேவிற்காக போர்ட் கொச்சி மற்றும் மட்டாஞ்சேரி பகுதியில் அமைந்துள்ள 14 பாரம்பரிய கட்டிடங்கள் கலைக் கூடங்களாக மாற்றப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 90 கலைஞர்களின் படைப்புகளும், கலைத் தொகுப்புகளும் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. ஓவியம் மற்றும் சிற்பக் கலையை விட நிறுவகக் கலைக்கே, பினாலேயில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஒலி - ஒளி காட்சிகளும் இடம் பெறுகின்றன.

பாலஸ்தீன், துருக்கி, லெபனான், எகிப்து, கென்யா, ஆப்ரிக்கா, சிலே, மலேசியா, ஜப்பான், வியட்நாம் மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களின் படைப்புகள் இடம் பெறுகின்றன. திபெத் மற்றும் நேபாள கலைத் தொகுப்புகளும், சென்னை பினாலே புகைப்படத் தொகுப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கலைக் கூடங்களை பார்வையிட நபர் ஒன்றிற்கு 150 ரூபாயும், மாணவர்களுக்கு 50 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும் என விழாக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கேரளத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டில் இருந்து இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொச்சின் பினாலே நடந்துவருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு கரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் காரணமாக இந்நிகழ்வு நடைபெறவில்லை. இதனால் 4 ஆண்டுகளுக்குப் பின்பு நடைபெறும் நிகழ்வு என்பதால் கலைஞர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இருந்தும் கடைசி நேரத்தில் பினாலே தொடங்குதல் தள்ளிப் போயிருப்பதால் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளத்திற்கு வந்து முகாமிட்டிருக்கும் கலைஞர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

x