கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று ஆஜரானார்.
ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி மாணவர் கோகுல்ராஜ். தன்னுடன் படித்த சக தோழியான சுவாதியுடன் கடந்த 2015 ஜூன் 23-ம் தேதி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு பேசிக் கொண்டிருந்தார். இரவு வெகு நேரம் ஆகியும் கோகுல்ராஜ் வீடு திரும்பாததால், அவருடைய பெற்றோர் கோகுல்ராஜைத் தேடினர்.
இதுதொடர்பாக, திருச்செங்கோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்த நிலையில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜின் ஆட்கள் கோகுல்ராஜை கடத்தியதாக கூறப்பட்டது. ஜூன் 24-ம் தேதி பள்ளிப்பாளையம் அருகே தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கோகுல்ராஜ் உடல் மீட்கப்பட்டது.
இக்கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை இன்று ஆஜர்படுத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. கோகுல்ராஜ் கொலை வழக்கு உத்தரவுகளை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்குகளில் உயர் நீதிமன்றம் மதுரை கிளை ஆணையிட்டிருந்தது.
அப்போது நீதிபதி கூறுகையில்," நீதித்துறை மனசாட்சியை திருப்திப்படுத்த தானாக முன்வந்து சுவாதியை விசாரிக்க விரும்புகிறது. கோகுல்ராஜ் கொலைக்கு முன்பாக சுவாதியுடன் நட்பில் இருந்ததுதான் வழக்கின் முக்கியமாக கருதப்படுகிறது. எனவே, சுவாதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் போதிய பாதுகாப்பை நாமக்கல் காவல்துறை வழங்க வேண்டும். மேலும், சுவாதியை யாரும் சந்திக்கவோ, செல்போனில் பேசுவதோ கூடாது என்பதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும். சுவாதி எவ்வித பயமும், அச்சுறுத்தலும் இன்றி நீதிமன்றம் வருவதை உறுதி செய்ய வேண்டும்" என விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையை நவ.25-ம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார்.
இந்த நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பலத்த பாதுகாப்புடன் காவல்துறையினர் இன்று ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சுவாதி, வாக்குமூலம் அளித்து வருகிறார்.