[X] Close

வேளாண்மைத் துறையில் கார்ப்பரேட் முதலீடு; எமர்ஜென்சி மூலம் ஜனநாயகத்தை சிறையில் வைத்த காங். - பிரதமர் மோடி உரை


  • kamadenu
  • Posted: 25 Jun, 2019 20:34 pm
  • அ+ அ-

புதிய அரசு பொறுப்பேற்ற பின் துவங்கிய நாடாளுமன்றக் கூட்டுக்குழு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிகழ்த்திய உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி உரையாற்றிய போது வேளாண்மைத் துறையில் கார்ப்பரேட் முதலீடு உட்பட நாட்டின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் பற்றி உரையாற்றினார்.

 

பிரதமர் மோடி பேச எழுந்தவுடன் பாஜக உறுப்பினர்கள் மோடி மோடி என்று கோஷமிட்டனர், அவர்களை அமைதிகாக்குமாறு கூறிவிட்டு உரையாற்றத் தொடங்கினார்.

 

அவரது உரை வருமாறு:

 

மக்களின் எண்ணங்களை குடியரசுத் தலைவர் தனது உரையில் தெளிவுப்படுத்தியுள்ளார். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

புதிய இந்தியாவை ,புதிய வளர்ச்சிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்போம். எங்களின் அரசை மக்கள் மீண்டும் தேர்வு செய்துள்ளமைக்கு நன்றி. கடந்த 5 ஆண்டுகால சிறப்பான ஆட்சிக்கு நாட்டு மக்கள் நல்லதொரு தீர்ப்பை வழங்கியுள்ளனர். மக்களின் நம்பிக்கையை பெறுவதைவிட வேறு பெரிய வெற்றி இல்லை. இந்திய மக்கள் தங்களை விட தேசியத்தை விரும்புகின்றனர். மக்கள் தற்போது எதிர்கால இந்தியாவுக்கு வாக்களித்துள்ளனர். வலுவான, பாதுகாப்பான இந்தியாவை உருவாக்குவோம்.

 

காங்கிரஸ் மற்றவர்களின் சிறந்த பணியை அங்கீகரிப்பதில்லை

 

2014 ல் நான் கூறினேன் ஏழை மக்களுக்கு அரசு அர்ப்பணிப்புடன் செயல்படும் என்றேன். கூறிய வாக்குறுதியை நிறைவேற்றினேன். எனது அரசு எப்போதும் ஏழை மக்களுக்காகவே பணியாற்றும். மக்களுக்கு தேவையான திட்டங்களை விவாதித்து நிறைவேற்றுவோம்.

சாதாரண மனிதனின் உரிமை காக்கப்பட வேண்டும். இதுவே எங்கள் அரசின் விருப்பம். நாங்கள் எதையும் திசை திருப்பவோ, நீர்த்து போக செய்யவோ இல்லை.

சமையல் எரிவாயு, கழிப்பறை, மின்சாரம் வழங்கியது மக்கள் எண்ணங்களைத் தொட்டது. விவாதங்கள் ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும். எதிர்கட்சியினர் விவாதங்களும் மதிக்கப்படும். இந்த அவைக்கு வந்துள்ள அனைத்து எதிர்கட்சியினரையும் வரவேற்கிறேன். இந்த நேரத்தில் நாம் அனைவருக்கும் ஒற்றுமை மிக அவசியம்.  70 ஆண்டுகளாக இருந்து வரும் நோய்களை 5 ஆண்டுகளில் குணப்படுத்துவது கடினம். ஆனால் நாங்கள் குறைத்திருக்கிறோம். வறுமை ஒழிப்பும் நவீனமயமாக்கமும் உடனுக்குடன் செல்ல வேண்டும் என்று விரும்புகிறோம்

 

காங்கிரஸ் அரசு உண்மை நிலையில் இருந்து விலகி இருந்தது. இந்த அரசு சிறப்பானதாக செயல்படுகிறது. நாங்கள் எந்த சாதனைகளையும் எதிர்ப்பது இல்லை. காங்கிரஸ் மற்றவர்களின் சிறந்த பணியை அங்கீகரிப்பதில்லை. கடந்த கால பிரதமர்கள் வாஜ்பாய், நரசிம்மராவ், மன்மோகன்சிங்கை கூட காங்கிரஸ் உரிய மரியாதை அளிக்கவில்லை. நாங்கள் பிரணாப் முகர்ஜிக்கு பாரத் ரத்னா விருது வழங்கினோம்

 

ஜனநாயகத்தை சிறை வைத்த காங்கிரஸ்:

 

இன்று ஜூன் 25ம் தேதி. இன்று அவசரநிலைப் பிரகடனத்தின் 44ம் ஆண்டு தினமாகும். நாங்கள் எமர்ஜென்சியை நினைவில் வைத்துக் கொள்வது யாரையும் குத்திக் காட்டுவதற்காக அல்ல மாறாக ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை நினைவில் கொள்வதற்காக.

 

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்தி ஒவ்வொருவரையும் பங்கு கொள்ளச் செய்தார். 1942இல் சுதந்திரத்துக்காக எப்படிப் போராடினோம் போன்ற முக்கியத் தேதிகளை கொண்டாடுவோம்.

 

எங்கள் அரசு  பதவியேற்று 3 வாரங்கள்தான் ஆகிறது. அதற்குள் மைல்கல்லான முடிவுகளை எடுத்துள்ளோம், விவசாயிகளுக்கு பென்ஷன் திட்டம் போலீஸாரின் குழந்தைகளுக்கு ஸ்காலர்ஷிப், அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் என்று சில முக்கியமானவற்றை சாதித்துள்ளோம்.

 

நீரைச் சேமிக்க அரசியலைக் கடந்து மேலெழுவோம்:

 

நீரைச் சேமிக்க நாம் அரசியலைக் கடந்து மேலெழுவது அவசியம். நீர் வறட்சி ஏழைகளையும் பெண்களையும் பெரிய அளவில் பாதிக்கிறது. ராம் மனோகர் லோஹியா கூறுவார் பெண்களின் மிகப்பெரிய பிரச்சினையே கழிப்பறை இல்லாததும், நீர் வறட்சியும்தான் என்பார். இன்று அவரது கனவை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம்.  நீரைச் சேமிக்க விவசாயத்தில் பழைய நடைமுறைகளை நாம் கைவிட வேண்டும்.

 

வேளாண்மையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஈடுபாடு இல்லாமல் இருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் குளிர்ப்பதன கிட்டங்கி உள்ளிட்டவைகளில் முதலீடு செய்ய வேண்டும்.

 

சுதந்திரத்தின் போது நம்மிடம் ராணுவத் தளவாடங்கள் தயாரிக்க 13 தொழிற்சாலைகள் இருந்தன, சீனாவில் அப்போது எதுவும் இல்லை. ஆனால் இன்று சீனா ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்கிறது, ஆனால் நாம் இறக்குமதி செய்து வருகிறோம். இதனால்தன மேக் இன் இந்தியா அவசியம் என்கிறோம்.

 

முத்தலாக் தடை மசோதா:

 

முத்தலாக் தடை மசோதா தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு பல வாய்ப்புகள் கிடைத்தது, ஆனால் அதனை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அது நாடு முழுதும் ஒரே சிவில் கோட் என்பதைக் கொண்டும் வரவில்லை, முஸ்லிம் பெண்களுக்கு சட்டப்பாதுகாப்பும் வழங்கவில்லை. உச்ச நீதிமன்றம் ஷாபானு வழக்கு மூலம் இவற்றைத் தீர்க்க அவர்களுக்கு வாய்ப்பு வழங்கியது. ஆனால் அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை.  இப்போது நாங்கள் இன்னொரு வாய்ப்பு வழங்கியுள்ளோம்.

 

இவ்வாறு உரையாற்றினார் பிரதமர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close