[X] Close

எங்களின் மத சுதந்திரம் பற்றி கேள்வி எழுப்ப வெளிநாட்டு அரசுக்கு உரிமையில்லை: அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்


  • kamadenu
  • Posted: 23 Jun, 2019 15:50 pm
  • அ+ அ-

-ஐ.ஏ.என்.எஸ்

எங்கள் நாட்டு மக்களின் மத சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்ப எந்த வெளிநாட்டு அரசுகளுக்கும் உரிமை இல்லை என்று அமெரிக்காவுக்கு இந்தியா கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை 2018-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த அறிக்கையை நேற்று வெளியிட்டு இருந்தது. அதில் இந்தியாவில் சிறுபான்மையினர் உரிமை, ஆளும் பாஜக அரசாலும், அவர்களுக்கு ஆதாரவானவர்களாலும் பறிக்கப்படுகிறது.

பசுக்களைக் காக்கிறோம் என்ற பெயரில் கடந்த ஆண்டில் குறிப்பாக முஸ்லிம்கள் மீது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்தத் தாக்குதல்கள் நடத்துவதைத் தடுக்க வேண்டிய இடத்தில் இருக்கும் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் தவறு செய்பவர்களைப் பாதுகாக்கிறார்கள் என்று கண்டித்திருந்தது. மேலும், சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.

மேலும், ஏறக்குறைய 8 பக்கங்களுக்கு மேலான அறிக்கையில், மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தது. சிறுபான்மையினருக்கு எதிராக மத்தியில் ஆளும் பாஜக அரசு செய்யும் செயல்கள், முஸ்லிம்களுக்கு எதிராக கும்பல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக தகுந்த கடினமான நடவடிக்கை எடுக்காமல் விடுவது குறித்து சுட்டிக்காட்டி இருந்தது.

அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட இந்த அறிக்கைக்கு மத்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்து, உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என எச்சரித்துள்ளது.

Mob-Lynchingjpg.jpg 

வரும் 25-ம் தேதி அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ இந்தியாவுக்கு வரும் நிலையில் இந்த அறிக்கை வெளியானது. இதற்கு இந்தியாவும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ராவேஷ் குமார்  வெளியிட்ட அறிக்கையில், "இந்தியா வலிமையான, சக்தி மிகுந்த ஜனநாயகத்தைக் கொண்டது. இங்கு அனைத்து மக்களுக்கும் அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சிறுபான்மையினரின் உரிமைகள் அரசமைப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்பட்டுள்ளது.

எந்த வெளிநாட்டு அரசும், நிறுவனமும் எங்கள் நாட்டு குடிமக்களின் உரிமைகளை சட்டரீதியாகப் பாதுகாக்கிறோம் என்று கூறவேண்டிய அவசியம் இல்லை. மத சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பவும் தேவையில்லை.

மதச்சார்பின்மைக்கு அதிகமான முக்கியத்துவம் வழங்கியதை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது. மிகப்பெரிய ஜனநாயகத்தையும், பன்முகச் சமூகத்தையும் கொண்டது. சகிப்பின்மையுடன்  அனைவரையும் உள்ளடக்கி இருக்க வேண்டும் என்பதை நீண்டகால நோக்கமாக வைத்துள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டம் அனைத்து குடிமக்களுக்கும், குறிப்பாக சிறுபான்மையினருக்கும் அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close