[X] Close

அடுத்த தலைவரைத் தேர்வு செய்யும் விஷயத்தில் நான் தலையிடவில்லை: ராகுல் காந்தி விளக்கம்


  • kamadenu
  • Posted: 20 Jun, 2019 15:57 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ.

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரைத் தேர்வு செய்யும் விஷயத்தில் நான் தலையிடவில்லை. அதைக் கட்சியின் தலைமை முடிவு செய்யும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளித்தார்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டும் வென்றது. கடந்த 2014-ம் ஆண்டைப் போல் இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற முடியாமல் போனது. கடந்த 2014-ம் ஆண்டில் 44 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வென்றது.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு நேர்ந்த தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி கடந்த மாதம் 25-ம் தேதி நடந்த கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இதை செயற்குழு உறுப்பினர்கள் ஏற்கவில்லை. ஆனால், ராகுல் காந்தி தொடர்ந்து தனது முடிவை தளர்த்திக்கொள்ளாமல் இருந்து வருகிறார். விரைவில் கூடவுள்ள செயற்குழுக் கூட்டத்தில் அது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

தற்போது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. இன்று கூட்டுக் கூட்டத்தில் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

அதன்பின் கூட்டம் முடிந்து வெளியே வந்த ராகுல் காந்தி நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த உங்கள் முடிவில் மாற்றம் உண்டா எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு ராகுல் காந்தி பதில் அளிக்கையில், "காங்கிரஸ் கட்சியின் தலைவரை கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும். தலைவரைத் தேர்வு செய்யும் விஷயத்தில் நான் தலையிடவிடவில்லை. தலைவரைத் தேர்வு செய்வது வெளிப்படையாகவே நடக்கிறது" எனத் தெரிவித்தார்.

ரஃபேல் போர்விமானக் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளது எனும் தனது நிலைப்பாட்டை ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி  வருகிறார். இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையின்போது, ரஃபேல் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில், "நான் என்னுடைய நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறேன். ரஃபேல் போர்விமானக் கொள்முதலில் திருட்டு நடந்துள்ளது. அதில் நடந்துள்ள ஊழல் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்

இதற்கிடையே ரஃபேல் போர்விமானக் கொள்முதல் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரி ஊழல் கண்காணிப்பு ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், ரஃபேல் விமானக் கொள்முதலில் எந்தவிதமான ஊழலும் நடக்கவில்லை என்று மத்திய அரசு கூறிவருவதும் நினைவுகூரத்தக்கது.

இன்றைய நாடாளுமன்ற கூட்டுக்குழுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசிக்கொண்டிருந்தபோது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது செல்போனில் எதையோ தேடிக்கொண்டிருந்தார் என்று பாஜக வீடியோவை வெளியிட்டது. அந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close