[X] Close

நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்: ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து


  • kamadenu
  • Posted: 19 Jun, 2019 11:29 am
  • அ+ அ-

-பி.டி.ஐ.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 49-வது பிறந்தநாளைக் கொண்டாடுவதையடுத்து, நல்ல உடல்நலத்தையும், நீண்ட ஆயுளை பெற்று வாழ வேண்டும் என்று பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 49-வது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுகிறார். ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கே.சி. வேணுகோபால், ஏ.கே.அந்தோனி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் இன்று காலை ராகுல் இல்லத்துக்குச் சென்று நேரில் வாழ்த்துத் தெரிவித்தனர்.

ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி அலுவலகம் விழாக் கோலம்பூண்டுள்ளது. தொண்டர்கள் காலையில் இருந்தே உற்சாகத்துடன் இனிப்புகளை பரிமாறிக்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடியும் ட்விட்டரில் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், " ராகுல் காந்திக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளையும், ஆரோக்கியமான உடல் நலத்தையும் பெற்று வாழ வேண்டும் " என வாழ்த்தியுள்ளார்.

மக்களவைத் தேர்தலின் போது, பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் கடுமையாக ஒருவரையொருவர் விமர்சித்து பிரச்சாரம் செய்தனர். ஆனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

மேலும், ராகுல் காந்திக்கு மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவி்த்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், " ஒவ்வொரு பாதகமான சூழலிலும் உங்களின் வெல்ல முடியாத துணிச்சல் வெளிப்படுகிறது, கொள்கைகள் மீதான ஒவ்வொரு தாக்குதலின்போதும் உங்களின் அர்ப்பணிப்பு பணி வெளிப்படுகிறது, உங்களின் எளிமை, நேர்மை, அரசியலில் வெளிப்படுகிறது. வாழ்த்துக்கள் ராகுல் காந்தி" எனத் தெரிவித்துள்ளார்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close