[X] Close

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்: தெலங்கானா முதல்வரும் புறக்கணிக்க முடிவு?


  • kamadenu
  • Posted: 15 Jun, 2019 10:21 am
  • அ+ அ-

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் அமைப்பின் ஆட்சி மன்றக் குழு கூட்டத்தை மம்தா பானர்ஜியை தொடர்ந்து தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் புறக்கணிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2014-ம் ஆண்டில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப் பேற்ற பின்னர், நாட்டின் அடுத்த ஐந் தாண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களை வரையறுக்கும் மத்திய திட்டக்குழு கலைக்கப்பட்டது. பின்னர் அதற்கு மாற்றாக நிதி ஆயோக் என்னும் பெயரில் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக பிரதமர் செயல்பட்டு வருகிறார்.

நிதி ஆயோக் அமைப்பின் ஐந்தாவது ஆட்சிமன்றக் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறவுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள், ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நிதி ஆயோக்கின் துணைத் தலைவர், தலைமைச் செயல் அதிகாரி, உறுப்பினர்களும் பங்கேற்கின்றனர். நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளார்.

மாநில அரசு களுக்கு ஒதுக்கீடு அளிக்க உதவி செய்யும் எந்த அதிகாரமும் இல்லாத நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதில் பலனில்லை எனவும் மம்தா பானர்ஜி தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு முன்பு வரை சந்திரசேகர ராவ் மத்திய அரசுடன் நல்லுறவில் இருந்தார். ஆனால் இந்த தேர்தலில் தெலங்கானாவில் 4 இடங்களில் பாஜக வென்றது.

அதுமட்டுமல்லாமல், சந்திரசேகர ராவின் மகள் கவிதாவையும் தோற்கடிக்கச் செய்தது. தெலங்கானாவில் பாஜகவின் வளர்ச்சி அதிகரிக்கும் நிலையில் அதனை தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் சந்திரசேகர ராவ் இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும், அவர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். தெலங்கானாவில் நீர்பாசன திட்டங்களை செயல்படுத்தும் பணிகள் இருப்பதால் அவர் கலந்து கொள்ள மாட்டார் என தெலங்கானா மாநில அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதுபோலவே நீர்பாசன திட்டத் தொடங்க விழா தெலங்கானாவில் நடைபெறும்போது, அதில் பிரதமர் மோடி பங்கேற்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close