[X] Close

மோடி, அமித் ஷாவுடன் மேற்கு வங்க ஆளுநர் சந்திப்பு; குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வாய்ப்பு என தகவல்


  • kamadenu
  • Posted: 11 Jun, 2019 07:31 am
  • அ+ அ-

மேற்கு வங்கத்தில் வன்முறை சம்பவங்கள் தொடரும் நிலையில், அம்மாநில ஆளுநர் கேசரி நாத் திரிபாதி பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்தித்துப் பேசினார்.

மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடந்த வன்முறைக்கு இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, 24 பர்கானாஸ் மாவட்டத்தில் 2 தினங்களுக்கு முன்பு இரவு நிகழ்ந்த வன்முறையில் திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த ஒருவரும் பாஜகவைச் சேர்ந்த 3 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு இரு கட்சியினரும் பரஸ்பரம் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதனிடையே, தொடரும் வன்முறை சம்பவங்கள் கவலை அளிப்பதாகவும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு மாநில அரசுக்கு கடிதம் எழுதியது. இதற்கு முதல்வர் மம்தா பானர்ஜி எழுதியுள்ள பதில் கடிதத்தில், “தேர்தலுக்குப் பிறகு ஆங்காங்கே ஒரு சில மோதல் சம்பவம் நடந்துள்ளது. அதேநேரம், இதுபோன்ற செயலில் ஈடுபடுவோர் மீது காவல் துறையினர் உடனுக்குடன் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளது” என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்க ஆளுநர் கேசரி நாத் திரிபாதி, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, மாநில நிலவரம் குறித்து இருவரிடமும் எடுத்துக் கூறியுள்ளார். இந்த சந்திப்புக்குப் பிறகு திரிபாதி செய்தியாளர்களிடம் கூறும்போது, “பிரதமர் மோடியையும் அமைச்சர் அமித் ஷாவையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தேன். மேலும் மாநில நிலவரம் குறித்து இருவரிடமும் எடுத்துக் கூறினேன்” என்றார்.

மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த வேண்டும் என பாஜக மூத்த தலைவர் கூறியிருப்பது குறித்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளரின் கேள்விக்கு, “அதற்கான வாய்ப்பு உள்ளது. எனினும், இது தொடர்பாக எதுவும் ஆலோசிக்கவில்லை” என பதில் அளித்தார். கேசரி நாத் திரிபாதியின் பதவிக் காலம் வரும் ஜூலை 23-ம் தேதியுடன் முடிவடய உள்ளது குறிப்பிடத்தக்கது.

கறுப்பு தினம் அனுசரிப்பு

மேற்கு வங்கத்தில் பாஜக சார்பில் நேற்று கறுப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கறுப்பு பட்டை அணிந்து அக்கட்சித் தொண்டர்கள் பேரணியாக சென்றனர். அப்போது, பாஜக தொண்டர்கள் தொடர்ந்து கொல்லப்படுவதைக் கண்டித்து கோஷம் எழுப்பினர். கொலையாளிகளை உடனடியாக கைது செய்யுமாறு அவர்கள் வலியுறுத்தினர். மேலும் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பசிர்ஹட் வட்டத்துக்குட்பட்ட பகுதியில் நேற்று 12 மணி நேர கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால், வாகனம், ரயில் போக்குவரத்தும் முடங்கியது. இதையடுத்து மேலும் வன்முறை சம்பவங்கள் நிகழ்வதைத் தடுக்க ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close