[X] Close

மே.வங்க பேரவைத் தேர்தலில் 250 தொகுதிகள் இலக்கு: ‘புளூபிரின்ட்’ தயாரிக்கிறது பாஜக


250

  • kamadenu
  • Posted: 10 Jun, 2019 10:57 am
  • அ+ அ-

மேற்குவங்க மாநிலத்தில் 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 250 தொகுதிகளை கைப்பற்ற, இப்போதே பாஜக செயல்திட்டம் (புளூபிரின்ட்) தயாரித்து வருகிறது.

சமீபத்தில் முடிந்த மக்களவைத் தேர்தலில், மேற்குவங்கத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் பாஜக 18 இடங்களைக் கைப்பற்றி ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி அளித்தது. மம்தாவின் திரிணமூல் கட்சி கடந்த 2014-ம் ஆண்டு 34 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால், இந்தத் தேர்தலில் 22 இடங்களை மட்டுமே பிடித்தது.

இந்நிலையில், மேற்குவங்கத்தில் 294 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு 2021-ம் ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதால், சட்டப்பேரவைத் தேர்தலில் 250 தொகுதிகளைக் கைப்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக செயல்திட்டத்தை தீவிரமாகத் தயாரித்து வருகிறது.

இதற்காக பெங்காலிகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவது, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க தொழிற்துறைக்கு முன்னுரிமை அளிப்பது, குடியுரிமை (திருத்த) மசோதா மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு திட்டத்தை அமல்படுத்துவது போன்ற முக்கிய திட்டங்களை வாக்குறுதிகளாக அளிக்க பாஜக முடிவெடுத்துள்ளது.

ஆனால், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, பாஜகவின் திட்டத்துக்கு முக்கியத்துவம் தரவில்லை. அக்கட்சியின் தலைவர்கள் கூறும்போது, ‘‘வரும் 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் திரிணமூல் கட்சி ஆட்சியைப் பிடிக்கும். பாஜக மண்ணை கவ்வும்’’ என்று நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

எனினும், மக்களவைத் தேர்தலில் பாஜக 40.5 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. மேலும், 18 தொகுதிகளில் வெற்றியும், பல தொகுதிகளில் 2-ம் இடத்தையும் பிடித்தது. அத்துடன் சட்டப்பேரவை வாரியாக பதிவான வாக்குகளின் புள்ளிவிவரத்தைப் பார்க்கும் போது 130 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் இருந்ததும் தெரிய வந்துள்ளது. எனவே, பாஜக தலைவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பாஜக தேசிய பொதுச் செயலாளரும் மேற்குவங்க மாநில பாஜக பொறுப்பாளருமான கைலாஷ் விஜய்வர்கியா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் 250 இடங்களில் வெற்றி பெறும் இலக்குடன் செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த இலக்கை அடைவோம்.

இவ்வாறு கைலாஷ் விஜய்வர்கியா கூறினார்.

மேலும், திரிணமூல் காங்கிரஸின் 2 எம்எல்ஏ.க்கள், 50 கவுன்சிலர்கள் பாஜக.வில் இணைந்துள்ளனர். ஆனால், தற்போது திறமையுள்ள, மக்களிடம் நல்ல மதிப்புள்ள தலைவர்களை மட்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு பாஜக வந்துள்ளது. அதனால் திரிணமூல் கட்சியில் இருந்து பிரிந்து வரவிரும்பும் தலைவர்களை கட்சியில் தற்போதைக்கு சேர்க்க வேண்டாம் என்று பாஜக மேலிடம் கூறியுள்ளதாக மாநில தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கத்துடன், தற்போது, ‘ஜெய் மா காளி’ என்ற முழக்கத்தையும் பாஜக சேர்த்துள்ளது.-பிடிஐ

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close