மாடியில் விளையாடிய போது விபரீதம்: 2 வயது பெண் குழந்தை தவறி விழுந்து பலி


மதுரவாயல் அருகே முதல் மாடியில் இருந்து தவறி விழுந்த 2 வயது பெண் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல் கங்கையம்மன் நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ். கால்டாக்ஸி ஓட்டுநரான இவருக்கு திருமணமாகி பூர்ணிமா என்ற மனைவியும், இரண்டு வயதில் தியா என்ற பெண் குழந்தையும் இருந்தனர்.

இந்நிலையில் பிரகாஷின் மனைவி பூர்ணிமா, குழந்தை தியாவுடன் தனது வீட்டருகே வசிக்கும் அக்கா மகேஸ்வரி வீட்டிற்கு நேற்று சென்றார். அங்கு குழந்தை தியா முதல்மாடியில் உள்ள பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தியா பால்கனியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

அப்போது தரைத்தளத்தில் வசித்து வந்த வீட்டு உரிமையாளர் ஜானகிராமன் , சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த போது தியா ரத்தவெள்ளத்தில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரின் சத்தம் கேட்டு ஒடிவந்த பூர்ணிமா, உடனடியாக தியாவை மீட்டு எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த தியா இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து மதுரவாயல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

x