[X] Close

அசுர வளர்ச்சியில் பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பு; நிறுவனம் வர்த்தக மதிப்பு ரூ. 40 ஆயிரம் கோடியாக உயர்வு


40

  • kamadenu
  • Posted: 08 Jun, 2019 08:29 am
  • அ+ அ-

இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து உருவாக்கிய பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பு நிறுவனம் ரூ.1,300 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது. இன்று இந்நிறுவன வர்த்தக மதிப்பு ரூ.40 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது என்று நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுதிர் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டிருந்த சூழலில் இந்தியா இந்த திட்டத்துக்காகக் கூட்டு சேர்ந்தது. இதேபோல பல்வேறு தொழில்களில் ரஷ்யாவுடன் இந்தியா கூட்டு சேர்ந்ததில் குறிப்பிடத்தக்க பலன் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

1998-ம் ஆண்டு இந்தியாவின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவு (டிஆர்டிஓ) மற்றும் ரஷ்யாவின் என்பிஓ மஷினோஸ்ட்ரோயேனியா நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்தது. இந்நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள ஏவுகணைகளை தரையிலிருந்தும், வானத்திலிருந்தும், கப்பலிலிருந்தும், நீர் மூழ்கி கப்பலிலிருந்தும் செலுத்த முடியும் என்பது சாதகமான அம்சமாகும்.

இந்நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்ததால் ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு வர்த்தக வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் இந்நிறுவனத்தில் மத்திய அரசு மேற்கொண்ட ஆரம்பகட்ட முதலீடு ரூ.1,300 கோடி மட்டுமே என்று அவர் குறிப்பிட்டார். இந்த கூட்டு மூலம் மிகச் சிறந்த மதிப்பிலான சொத்து உருவாக்கப்பட்டுள்ளது. இது தவிர இந்நிறுவனம் அரசுக்கு ரூ.4 ஆயிரம் கோடிக்கு நேரடி மற்றும் மறைமுக வரி செலுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த ஏவுகணையை வாங்க சில நாடுகள் ஆர்வம் காட்டியுள்ளதாக தெரிவித்தார்.

ஏவுகணை உருவாக்கத்தில் இந்தியா சாஃப்ட்வேர் மேம்பாடு மற்றும் சில உதிரிபாக தயாரிப்பில் முக்கியப் பங்காற்றியுள்ளதாகக் குறிப்பிட்டார். இந்த ஏவுகணை உருவாக்கத்தில் இந்திய நிறுவனங்கள் வடிவமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றோடு நின்றுவிட்டன.

இருந்தாலும் தொழில்நுட்பத்தை மேம்படுத்த ரஷ்ய விஞ்ஞானிகளுக்கு தேவைப்பட்ட நிதியை அளித்து அதன் மூலம் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியுள்ளோம். இன்று 200 தொழில் நிறுவனங்கள் உதிரி பாக சப்ளைதாரராக இணைந்துள்ளன. இதன் மூலம் 20 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close