தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் ரோகித் டக் அவுட் ஆனாலும் இந்திய அணி வெற்றியை ருசித்தது.
தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் போட்டி கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இன்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் க்யூடன் டி காக்- டெம்பா பவாமா களமிறங்கினர். இந்திய பந்துவீச்சாளர் ஷாகர் முதல் விக்கெட்டாக பவாமாவை வீழ்த்தினார். இவர் டக்அவுட் ஆனார். பின்னர் வந்த ரீலி ரோஷ்வவ், டி காக்குடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஒரு ரன்கூட எடுக்கவில்லை. அர்தீப் சிங் பந்தில் டி காக் வீழ்ந்தார். இதையடுத்து ரீலி ரோஷ்சவ் அர்தீப் பந்தில் டக் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய அடின் மார்க்ரைன் சிறிது நேரம் தாக்குபிடித்து விளையாடினார். ஆனால் மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்து கொண்டே இருந்தது. டேவிட் மில்லர், ட்ரிஸ்சன் ஆகியோர் டக் அவுட்டாகி வெளியேறினர். 25 ரன்கள் எடுத்த மார்க்ரைன், பட்டேல் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதையடுத்து பர்னல்- மகாராஜ் 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து ரன்களை குவித்தனர். 24 ரன்னில் இருந்த பர்னல், 41 ரன் எடுத்திருந்த மகாராஜ் ஆகியோர் பட்டேல் பந்தில் அடுத்தடுத்து வீழ்ந்தனர். 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்கள் எடுத்தது.
இந்திய தரப்பில் அர்தீப் சிங் 3 விக்கெட்டும், பட்டேல், தீபக் ஷாகர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், அக்சர் பட்டேல் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல்- கேப்டன் ரோகித் சர்மா விளையாட வந்தனர். ரோகித் வந்த வேகத்தில் வெளியேறினார். 2 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆனார் ரோகித். பின்னர் வந்த விராட் கோலி 3 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் தொடக்க வீரர் ராகுல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 3-வது விக்கெட்டுக்கு இவருடன் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் அதிரடி காட்டினார். 33 பந்துகளில் 50 ரன்களை விளாசினார். இதில் 3 சிக்சர், 5 பவுண்டரிகள் அடங்கும். சூர்யகுமார் 8-வது அரை சதத்தை நிறைவு செய்தார். மற்றொரு தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 56 பந்துகளில் 51 ரன்களை எடுத்தார். இதில் 4 சிக்சர், 2 பவுண்டரிகள் அடங்கும். இவர் தனது 19-வது அரை சதத்தை பூர்த்தி செய்தார். 16.4 ஓவரில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. ராகுல்- சூர்யகுமார் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இந்திய அணியின் பெற்றிக்கு உதவினர். 3 போட்டிகள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.