அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத கனரக லாரி மோதி டூவீலரில் வந்த தாய், மகள் உயிரிழந்தனர். கணவன் கண் முன் நடந்த இந்த விபத்து, காஞ்சிபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம், ஓரிக்கை பேராசிரியர் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவர் தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஓரிக்கை மணிமண்டபம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுச் சுபநிகழ்ச்சிக்காக பழனி தனது மனைவி வித்யா, இரட்டை குழந்தைகளான பூர்ணிமா, பூர்விகா ஆகியோருடன் இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்று உள்ளார்.
அப்போது உத்திரமேரூர்- காஞ்சிபுரம் நெடுஞ்சாலை ஓரிக்கை மணிமண்டபம் பகுதியில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத கனரக லாரி பழனியின் இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பழனியின் மனைவி வித்யா, மகள் பூர்ணிமா சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்கள். பழனியும் மற்றொரு மகளான பூர்விகாவும் படுகாயங்களுடன் போராடியுள்ளனர். அப்பகுதியிலிருந்தவர்கள் இருவரையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீஸார் உயிரிழந்த தாய், மகளின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருசக்கர வாகனம் மீது விபத்து ஏற்படுத்திய லாரியை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.